ரூ. 1,200 கோடியில் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டாலும், புனித ஜார்ஜ் கோட்டையின் பாரம்பரிய கட்டடங்கள் பாதுகாக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

Published : September 3, 2026 at 12:28 PM IST
சென்னை: ரூ. 1,200 கோடியில், நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய ஒருங்கிணைந்த நிர்வாக வளாகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று (செப்டம்பர் 3) 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது புதிய தலைமை செயலகம் அமைப்பது குறித்து அறிவித்தார்.
“சென்னையில் கிழக்கிந்திய கம்பெனி தனது வணிக நடவடிக்கைகளைத் தொடங்கிய காலகட்டத்தில், 1640-ஆம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டையின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு, 1644-ஆம் ஆண்டு நிறைவடைந்தன.
பின்னர் 1652-ஆம் ஆண்டு இது பிரிட்டிஷ் ஆட்சியின் முக்கிய நிர்வாகத் தலைமையிடமாக உயர்த்தப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு புனித ஜார்ஜ் கோட்டை, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சுமார் 400 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் நிர்வாக மையமாகவும், மாநிலத்தின் ஆட்சி மற்றும் நிர்வாக பாரம்பரியத்தின் முக்கிய அடையாளமாகவும் இது விளங்கி வருகிறது.
இடப்பற்றாக்குறை
புனித ஜார்ஜ் கோட்டை வளாகம் மொத்தம் 107 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ளது. ஆனால் அதில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் தலைமைச் செயலகப் பயன்பாட்டிற்காக சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமே உள்ளது. மீதமுள்ள நிலப்பரப்புகள் இந்திய பாதுகாப்புத்துறை மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை (ASI) ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இதனால், தற்போதைய தலைமைச் செயலக வளாகத்தில் புதிய கட்டடங்களை கட்டுவது, விரிவாக்கம் செய்வது மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது போன்றவற்றில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. தற்போது தலைமைச் செயலகம் முக்கியமாக இரண்டு கட்டடங்களில் செயல்பட்டு வருகிறது.
புனித ஜார்ஜ் கோட்டை பிரதான கட்டடம்
தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடமாக அறியப்படும் புனித ஜார்ஜ் கோட்டை கட்டடத்தில் சட்டமன்றம், முதலமைச்சர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், அலுவலர்கள் மற்றும் பல்வேறு முக்கிய அரசுத் துறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கட்டடம் சுமார் 2 லட்சத்து 7 ஆயிரம் சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது.
மாநில அரசின் நிர்வாகத் தேவைகள் தொடர்ந்து விரிவடைந்த நிலையில், அலுவலக இடப்பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் 1978-ஆம் ஆண்டு 3 லட்சத்து 75 ஆயிரம் சதுரடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 10 தளங்களைக் கொண்ட கட்டடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்தில் அரசு செயலாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த பல ஆண்டுகளாக தலைமைச் செயலகத்தின் நிர்வாகத் தேவைகள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தற்போதுள்ள கட்டடங்களின் பரப்பளவு அதற்கேற்ற வகையில் விரிவுபடுத்தப்படவில்லை. மேலும், புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் மீதமுள்ள நிலப்பகுதிகள் பாதுகாப்புத்துறை மற்றும் ASI கட்டுப்பாட்டில் இருப்பதால், கூடுதல் கட்டடங்களை அமைப்பதற்கும் தேவையான மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கும் வாய்ப்புகள் குறைவாக உள்ளன.
புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலக வளாகம்
இந்த தேவைகளை கருத்தில் கொண்டு, புதிய தலைமைச் செயலகத்தை மட்டும் அமைப்பதற்குப் பதிலாக, அனைத்து அரசு துறைகளையும் ஒரே நிர்வாக வளாகத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் புதிய வளாகம் உருவாக்கப்பட வேண்டும். இந்த புதிய வளாகத்தில் நவீன அலுவலகங்கள் மட்டுமின்றி, நிர்வாகப் பணிகள் விரைவாகவும் ஒருங்கிணைந்த முறையிலும் நடைபெறுவதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலக வளாகத்தில், புதிய சட்டமன்றக் கட்டடம், தலைமைச் செயலக அலுவலகங்கள், அனைத்து முக்கிய அரசு துறைகளுக்கான அலுவலகங்கள், நவீன தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வசதிகள், போதுமான வாகன நிறுத்துமிடங்கள், நவீன மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள், அரசு அலுவலர்களுக்கான நவீன வசதிகள் மற்றும் பசுமைக் கட்டட தரநிலைகளுக்கு ஏற்ப சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
மேலும், புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டாலும், தமிழ்நாட்டின் நிர்வாக வரலாற்றில் முக்கிய இடம்பெற்றுள்ள புனித ஜார்ஜ் கோட்டையின் பாரம்பரிய கட்டடங்கள் பாதுகாக்கப்படும். அவை வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்களாகப் பராமரிக்கப்பட்டு, அவற்றின் கட்டடக்கலை மற்றும் பாரம்பரிய மதிப்பு எதிர்கால தலைமுறைகளும் அறியக்கூடிய வகையில் பாதுகாக்கப்படும்.
| இதையும் படிங்க: விரைவில் அறிவிப்பை வெளிடும் முதலமைச்சர் விஜய்! தலைமைச் செயலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடிவா? |
20 லட்சம் சதுரடியில் புதிய நிர்வாக நகரம்
தமிழ்நாட்டின் எதிர்கால நிர்வாகத் தேவைகளை கருத்தில் கொண்டு, 20 லட்சம் சதுரடி பரப்பளவில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய ஒருங்கிணைந்த வளாகம் உருவாக்கப்படும். இதற்காக ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
400 ஆண்டுகால புனித ஜார்ஜ் கோட்டையின் நிர்வாகப் பாரம்பரியத்தை பாதுகாத்து, அதே நேரத்தில் அடுத்த நூற்றாண்டுகளின் தேவைகளுக்கு ஏற்ற நவீன நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதே இந்த புதிய தலைமைச் செயலக வளாகத்தின் முக்கிய நோக்கமாகும்” என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

