ETV Bharat / state

கன்னியாகுமரி: இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிய வீடுகள் திறப்பு

முதல்வரிடம் பேசிய முகாம் வாழ் தமிழர்கள், அவர்களுக்கு தனியாக ரேஷன் கடை ஒன்று அமைத்து தர வேண்டும் என்றும் குடியுரிமை பெற்று தர வேண்டும் எனவும் முதலமைச்சரிடம் கேட்டுக்கொண்டனர்.

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகள்
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 24, 2026 at 8:24 PM IST

1 Min Read
Choose ETV Bharat

கன்னியாகுமரி: இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகள் முதல்வர் முன்னிலையில் இன்று திறக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்கள் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் பெருமாள்புரம் மற்றும் பழவிளை பகுதியிலும், விளவங்கோடு தாலுகாவில் கோழிவிளை மற்றும் ஞாரான்விளை பகுதியிலும் செயல்பட்டு வருகின்றன. இந்த மறுவாழ்வு முகாம்களில் சுமார் 1,200 இலங்கை தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பெருமாள்புரத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 6 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்ட 100 வீடுகள் கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

அதே போல, பழவிளையில் 4 கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்ட 72 வீடுகள் ஏற்கெனவே திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பெருமாள்புரத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் 7.85 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 90 வீடுகள் திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் இருந்தது.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சென்று முகாம் வாழ் தமிழர்களை திறந்து வைக்க கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில், அந்த 90 வீடுகள் முதலமைச்சர் முன்னிலையில் அங்கு வசிக்கும் முகாம் வாழ் தமிழர்களால் திறந்து வைக்கப்பட்டது.

அதன் பின்னர் வீடுகளை பார்வையிட்ட முதலமைச்சர் முகாம் வாழ் தமிழர்களுடன் கலந்துரையாடினார். அப்போது முதல்வரிடம் பேசிய முகாம் வாழ் தமிழர்கள், அவர்களுக்கு தனியாக ரேஷன் கடை ஒன்று அமைத்து தர வேண்டும், குடியுரிமை பெற்று தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் கூறியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: திறந்தவெளி சிறைச்சாலையாக விளங்கிய ’கேரித் தீவு’: தமிழர்களின் அவல வரலாற்றை சுமந்து நிற்கும் மலேசிய தீவு