ETV Bharat / state

நேபாள பெரு வெள்ளம்: சென்னையை சேர்ந்த 49 பேரின் நிலை என்ன?

நேபாளத்தில் சிக்கியுள்ள தங்களது குடும்பத்தினரை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சந்திரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேபாளத்தில் சிக்கிய கிஷோரின் மனைவி சந்திரா பேட்டி
நேபாளத்தில் சிக்கிய கிஷோரின் மனைவி சந்திரா பேட்டி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 27, 2026 at 5:25 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கிய சென்னையைச் சேர்ந்த 49 பேரின் நிலை என்ன? என்று தெரியாமல் அவரது உறவினர்கள் பரிதவித்து வருகின்றனர்.

நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை நேபாள அரசு முடுக்கிவிட்டுள்ளது. கைலாஷ் யாத்திரை சென்ற இந்தியர்களில் 178 பேர் காணாமல் போனதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்திய அரசு நேபாள அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. மேலும், உணவுகள் மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கிய 37.5 டன் அளவிலான நிவாரணத் தொகுப்புடன் இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானம், நேபாளம் தலைநகர் காத்மாண்டுக்கு சென்றுள்ளது.

இதனிடையே, கைலாஷ் யாத்திரைக்காக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குழுக்களாக நேபாளத்திற்கு சென்றிருந்தனர். பெரு வெள்ளத்தில் சிக்கியிருந்த 21 தமிழர்களை மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், அவர்களின் பெயர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. ஈஷா மையம் மூலம் யாத்திரை சென்ற 80 பேரின் நிலை தெரியவில்லை. நேபாளம்- திபெத் எல்லையில் உள்ள கிராங்க் பகுதிக்கு செல்ல எங்களை அனுமதிக்க வேண்டும் என்று ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டுள்ளார்.

நேபாள பெரு வெள்ளம்: சென்னையை சேர்ந்த 49 பேரின் நிலை என்ன? (ETV Bharat Tamil Nadu)

சென்னையை அடுத்த குரோம்பேட்டை ராதா நகர், ரங்கநாதன் தெருவில் செயல்பட்டு வரும் மகாதேவ் கைலாஷ் யாத்ரா என்ற தனியார் ஆன்மிக சுற்றுலா நிறுவனத்தின் மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 49 பேர் கடந்த ஆகஸ்ட் 14- ஆம் தேதி சென்னை விமான நிலையத்திலிருந்து நேபாளம் வழியாக சீனா எல்லையில் உள்ள கைலாஷ் யாத்திரைக்கு சென்றுள்ளனர்.

யாத்திரையை முடித்து விட்டு நேபாளம்- சீனா எல்லைப் பகுதியில் உள்ள குடியுரிமை அலுவலகத்தில் இமிகிரேஷன் நடைமுறைகளை மேற்கொண்டிருந்த போது திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 49 பேரையும் டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரின் மகனான சத்யநாராயணன் தலைமையில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அவரையும் தற்போது தொடர்புகொள்ள முடியாததால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னை குரோம்பேட்டை, ஜமீன் ராயப்பேட்டை, சின்ன தெரு பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் நேபாளத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் அவர்களை தொடர்புக் கொள்ள முடியவில்லை என்று அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நேபாளம் வெள்ளத்தில் சிக்கியுள்ள குரோம்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த கிஷோரின் மனைவி சந்திரா செய்தியாளர்களிடம் பேசுகையில், "எனது கணவர் கிஷோர் உட்பட எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் மற்றும் எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் என மொத்தம் 7 பேர், கடந்த ஆக.14- ஆம் தேதி நேபாளத்திற்கு சுற்றுலா சென்றனர்.

நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது நாங்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம். காலையில் நேபாளத்திற்கு சென்று விட்டு அங்கிருந்து சீன எல்லை பகுதிக்கு செல்ல உள்ளோம் எனத் தெரிவித்தார். அதன்பிறகு மறுநாள் காலையில் இருந்து அவரது செல்போன் எண்ணை தொடர்புக் கொள்ள முடியவில்லை, தொடர்ந்து முயற்சி செய்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

அவருடன் சென்ற ஆறு பேரையும் தொடர்புக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் சென்ற டிராவல்ஸ் ஏஜென்சியும் தொடர்பு கொண்டு விசாரித்தும் எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்த பிறகு தான் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள காற்றாற்று வெள்ளம் நிலச்சரிவு மற்றும் அங்கு மோசமான நிலைமை குறித்து எங்களுக்கு தெரியவந்தது.

எனது கணவர் உட்பட ஏழு பேரும் தற்போது எங்கு இருக்கிறார்கள், பாதுகாப்பாக இருக்கிறார்களா? என்பது எதுவுமே தெரியவில்லை. அவர்களைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால் நாங்கள் மிகுந்த அச்சத்திலும், கவலையிலும் இருக்கிறோம். எனவே, மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுத்து நேபாளத்தில் சிக்கியுள்ள எங்களது குடும்பத்தினரை அழைத்து வர வேண்டும்; முதலில் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைத் தெரியப்படுத்த வேண்டும்" என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: நேபாளத்திற்கு தமிழர்கள் 103 பேர் பயணம் செய்துள்ளனர் - பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் தகவல்