ETV Bharat / state

நேபாளத்துக்கு சுற்றுலா சென்ற 49 தமிழர்கள்: மகன் தலைமையில் அனுப்பி வைத்த ஏஜென்சி உரிமையாளர் கண்ணீர்

"எனது மகன் மற்றும் எங்கள் யாத்ரிகர்களின் நிலை குறித்து தகவல் கிடைக்காமல் இருப்பது மிகுந்த பதற்றத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கும் என காத்திருக்கிறோம்"

சென்னையில் இருந்து ஆன்மிக யாத்திரை சென்றவர்களில் ஒரு  பகுதியினர்
சென்னையில் இருந்து ஆன்மிக யாத்திரை சென்றவர்களில் ஒரு பகுதியினர் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 27, 2026 at 11:01 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் நிலவரம் குறித்து பெரிய அளவில் தகவல் கிடைக்காத நிலையில், சென்னையில் இருந்து 49 பேரை தனது மகன் தலைமையில் நேபாளத்துக்கு அனுப்பி வைத்த சுற்றுலா ஏஜென்சியின் உரிமையாளர் கண்ணீருடன் தனது கவலையை பதிவு செய்துள்ளார்.

சென்னையை அடுத்த குரோம்பேட்டை ராதா நகர் ரங்கநாதன் தெருவில் மகாதேவ் கைலாஷ் யாத்ரா என்ற பெயரில் தனியார் ஆன்மிக சுற்றுலா ஏஜென்சி செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின் மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 49 பேர், கடந்த 14 ஆம் தேதி சென்னை விமான நிலையத்திலிருந்து நேபாளம் சென்று, அங்கிருந்த சீனா எல்லையில் உள்ள கைலாஷ் யாத்திரைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

குரோம்பேட்டை, பெரம்பூர், ஆழ்வார்பேட்டை, எஸ்.பி. கோவில், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், தேனி, நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்த சுற்றுலா குழுவில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் சார்பில், மகாதேவ் கைலாஷ் யாத்திரா நிறுவனத்தின் உரிமையாளர் மாரவேலன் நாகப்பனை நேரில் சந்தித்து பேசினோம். அவர் கூறுகையில், "தமிழகத்தில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு பொதுவாக மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டமே ஏற்றதாக இருக்கும்.

இதையும் படிங்க: நேபாளம் பேரழிவு: டோல் ஃப்ரீ எண்ணில் ஒருவரும் பதிலளிக்கவில்லை - உறவினர் வேதனை

இந்த மாதங்களில்தான், நேபாளத்தில் லேசான மழை மட்டுமே பெய்யும். தனது நிறுவனத்தின் மூலம் ஆண்டுக்கு சுமார் 5 முறை தமிழகத்தில் இருந்து பயணிகளை நேபாளம் மற்றும் கைலாஷ் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று வருகிறோம். நேபாளம்,சீனா எல்லைப் பகுதி, காத்மாண்டு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களுக்கு பயணிகளை அழைத்துச் சென்று சுற்றிக் காண்பிப்போம்.

இந்த முழு பயணத்திற்கு, ஒருவரிடம் இருந்து தலா ரூ.2.20 லட்சம் வரை பேக்கேஜ் கட்டணமாக வசூலிக்கப்படும். மொத்தம் 14 நாட்கள் கொண்ட பயணமாக இந்த சுற்றுலா திட்டமிடப்படும்.

இந்த பயணமும் அதேபோன்று திட்டமிட்டபடி நடைபெற்றுக் கொண்டிருந்தது. யாத்திரையை முடித்த பின்னர் நேபாளம்,சீனா எல்லைப் பகுதியில் உள்ள குடியேற்ற அலுவலகத்தில் 'இமிகிரேஷன்' நடைமுறைகளை எங்கள் யாத்ரீகர்கள் மேற்கொண்டிருந்தனர்.

அப்பொழுதுதான், எதிர்பாராத விதமாக திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் மிக வேகமாக வந்ததால் அங்கு இருந்தவர்களின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை தகவல் வரவில்லை. எனது மகன் தலைமையில்தான் யாத்ரிகர்கள் சென்றிருந்தார்கள். அதனால் ஒரு தந்தையாக, எனது மகனுக்கு என்ன ஆனது என்பது பற்றியும் எனக்கு தெரியவில்லை.

எனது மகன் மற்றும் எங்கள் யாத்ரிகர்களின் நிலை குறித்து தகவல் கிடைக்காமல் இருப்பது மிகுந்த பதற்றத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கும் என காத்திருக்கிறோம்.

யாத்திரைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அனைவருக்கும் தேவையான ஆவணங்கள் மற்றும் காப்பீடு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யாத்ரிகர்களை விரைந்து கண்டறிந்து அவர்களின் நிலை குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவர்களை பாதுகாப்பாக மீட்டு கொண்டு வரவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.