ETV Bharat / state

நேபாள வெள்ளப்பெருக்கு; 6 நாட்கள் ஆகியும் தகவல் கிடைக்காததால் வேதனை - மீண்டும் ஆட்சியரிடம் முறையிட்ட உறவினர்கள்

காணாமல் போனவர்களை பாதுகாப்பாக தமிழ்நாடு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த செல்வம் குடும்பத்தினர்
தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த செல்வம் குடும்பத்தினர் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 31, 2026 at 5:02 PM IST

2 Min Read
Choose ETV Bharat

தேனி: நேபாள வெள்ளப்பெருக்கின்போது காணாமல்போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் குறித்த தகவல் 6 நாட்கள் ஆகியும் கிடைக்காததால் அவர்களது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தேனி மாவட்டம், கோடாங்கிபட்டியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் தனது மனைவி சித்ராதேவி, தாய் சரஸ்வதி ஆகியோருடன் நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற நிலையில், அங்கு ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின்போது மூவரும் காணாமல் போகினர். தற்போது வரை அவர்கள் குறித்த எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.

ஆகையால் வெள்ளப்பெருக்கின்போது காணாமல் போன இந்த மூன்று பேரையும் கண்டுபிடித்து தரும்படி செல்வத்தின் உறவினர்கள் இன்று (ஆகஸ்ட் 31) தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

ஆகஸ்ட் 14 ஆம் தேதி அன்று 49 பேர் கொண்ட குழுவுடன் இவர்கள் மூவரும் நேபாளம் சென்ற நிலையில், இப்போது வரை அவர்கள் குறித்த எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. குறிப்பாக, ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்கு பின்னர் அவர்களுடனான தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஆகஸ்ட் 27 அன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து, மூன்று பேரையும் கண்டறிந்து பாதுகாப்பாக மீட்டு தர வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இன்றுடன் ஆறு நாட்கள் ஆகியும் இப்போது வரை மூன்று பேரின் நிலை குறித்து உறுதியான தகவல் கிடைக்கவில்லை.

எனவே, இன்று மீண்டும் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த காணாமல் போன செல்வத்தின் உறவினர்கள் மேலுமொரு மனுவை வழங்கினர். நேபாளத்தில் சிக்கியுள்ள தங்களது குடும்பத்தினரை உடனடியாக கண்டறிந்து, அவர்களின் தற்போதைய நிலை குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என அதில் கோரிக்கை விடுத்தனர். அத்துடன், அவர்களை பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இதையும் படிங்க: நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய 84 தமிழர்களை தொடர்புகொள்ள முடியவில்லை – பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்

இந்த சூழலில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "இதுவரை கிடைத்த தகவலின்படி, தமிழகத்தைச் சேர்ந்த 305 பேர் கைலாச யாத்திரைக்காக நேபாளம் சென்றுள்ளனர். இவர்களில் 220 பேர் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 84 பேரை தற்போது வரை தொடர்புகொள்ள முடியாத நிலை உள்ளது" எனத் தெரிவித்தார்.

இந்த 84 பேர்களில் தேனியைச் சேர்ந்த செல்வம், சித்ராதேவி மற்றும் சரஸ்வதியும் அடங்குவர். இவர்கள் சென்னை குரோம்பேட்டையில் இருந்து இயங்கி வரும் 'மகாதேவ் கைலாஷ் யாத்திரா' எனும் தனியார் பயண ஏற்பாட்டாளர் வாயிலாகவே அவர்கள் பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.