அம்மாவிடம் இருந்து எந்த தகவலும் இல்லை; பயமாக உள்ளது - நேபாளத்தில் சிக்கிய சித்ராவின் மகன் வேதனை
"20-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் குழுக்களில் அரசு சார்பில் தகவல் வந்தது. ஆனால், அதிலும் எனது அம்மா பெயர் இல்லை. எங்களுக்கு மிகவும் பயமாக உள்ளது"

Published : August 27, 2026 at 7:47 PM IST
தஞ்சாவூர்: தனது தாயாரிடம் இருந்து எந்த தகவலும் வராததால் பயமாக உள்ளது என்றும், அவரை விரைந்து மீட்டுத் தருமாறும் நேபாளத்தில் சிக்கியுள்ள சித்ரா என்பவரின் மகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேபாள நாட்டில் பாயும் போடே கோஷி நதியில் நேற்று (ஆக.25) பெருவெள்ளம் ஏற்பட்டு மூன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களை சூறையாடிச் சென்றது.
இந்த கோர பேரிடரில் சிக்கி 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், 700-க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமல் போனவர்களில் 178 பேர் இந்தியர்கள் ஆவர். தமிழகத்தில் இருந்து நேபாளத்துக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்ட 57 பேரில் 20 பேர் பத்திரமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளனர்.
மீதமுள்ள 37 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. இவர்கள் சென்னை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் மொத்தம் 16 பேர் (கும்பகோணம் 11 தஞ்சாவூர் 5) நேபாளத்துக்கு ஆன்மீக சென்றுள்ளனர்.
| இதையும் படிங்க: நேபாளத்தில் பாதுகாப்பாக உள்ள 21 தமிழர்கள்; மீதமுள்ளவர்கள் நிலை என்ன? - கும்பகோணம் ஏஜென்சி உரிமையாளர் தகவல் |
அவர்களின் பெயர் விவரம்:
அன்பழகி, சித்ரா, சிவயோகம், இளவரசி, தங்கமதி ஆகியோர் தஞ்சாவூர் நகரில் இருந்து நேபாளம் சென்றுள்ளனர்.
ராம்குமார், கீதா, ராஜ்குமார், ஜெயந்தி, ரமேஷ், திருமலைராஜன், தையல்நாயகி, சாய்நாத், ஜெயலெட்சுமி, கேதாரகௌரி, சையத் உமர் பாருக் (டிராவல்ஸ் உரிமையாளர் மகன்) ஆகியோர் கும்பகோணத்தில் இருந்து நேபாளம் சென்றுள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து தஞ்சாவூரை சேர்ந்த சித்ரா என்பவரின் மகன் ராஜா கூறுகையில், "கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, எனது தாயார் நேபாளத்துக்கு ஆன்மீக பயணம் சென்றார், நேற்று காலை 6 மணியளவில் அவர் நேபாளத்தில் எடுத்த புகைப்படத்தை எனது செல்போனுக்கு அனுப்பினார்.
இதுதான் அவர் எனக்கு அனுப்பிய கடைசி தகவல். பின்னர்தான் நேபாளத்தில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. 20-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் குழுக்களில் அரசு சார்பில் தகவல் வந்தது. ஆனால், அதிலும் எனது அம்மா பெயர் இல்லை. எங்களுக்கு மிகவும் பயமாக உள்ளது.
எனவே, காலம் தாழ்த்தாமல் மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் விரைந்து மீட்பு பணிகளை எடுக்க வேண்டும். எனது தாயாரை எங்களிடம் மீண்டும் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்" என ராஜா கூறினார்.

