மாணவி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு; அரசு கல்லூரி முதல்வர் கைது
மாணவி அளித்த புகாரின் பேரில் அரசு கல்லூரி முதல்வர் மற்றும் அவரது கணவரிடம் நடத்திய 8 மணி நேர விசாரணைக்கு பிறகு சைபர் கிரைம் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Published : January 6, 2026 at 10:12 PM IST
திருநெல்வேலி: மாணவி குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக பதிவிட்ட கல்லூரி முதல்வர் மற்றும் அவரது கணவர் இருவரையும் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் பழையபேட்டையில் செயல்பட்டு வருகிறது ராணி அண்ணா அரசு பெண்கள் கல்லூரி. இங்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அந்த கல்லூரில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்துவரும் மாணவி ஒருவர் குறித்து அவதூறாகவும், ஆபாசமான கருத்துக்களும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி, இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிசம்பர் 16ஆம் தேதி புகார் அளித்தார். அதில், ‘கல்லூரியின் தமிழ்த்துறை தலைவராக இருந்த சுமிதாவின் (தற்போது அக்கல்லூரி முதல்வர்) சமூக வலைத்தள முகவரியிலிருந்தே என் மீது அவதூறு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என மாணவி கூறியிருந்தார். இச்சம்பவத்தில் மாணவிக்கு ஆதரவாக டிசம்பர் 17ஆம் தேதி இந்திய வாலிபர் சங்கத்தினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில், மாணவியின் புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கடந்த 20 நாட்களாக விசாரணை நடந்து வந்த நிலையில், கல்லூரி முதல்வர் சுமிதாவும், அவரது கணவர் பொன்னுதுரையும் சேர்ந்து தான் மாணவி குறித்து அவதூறு மற்றும் ஆபாச கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பியது தெரியவந்தது. முதல்வரின் கணவர் பொன்னுதுரை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றி வருகிறார்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த சைபர் கிரைம் போலீசார், இன்று காலை முதல் விசாரித்து வந்தனர். சுமார் 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு, மாணவி குறித்து அவதூறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிய குற்றத்திற்காக அவர்கள் மீது U/S 79 மற்றும் Ins 67 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், மாணவிகளிடம் நற்பண்புகளை வளர்க்க வேண்டிய முதல்வரே இதுபோன்ற செயலில் ஈடுபட்ட சம்பவம் மற்ற பேராசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கல்லூரி முதல்வர் பிணையில் வெளி வரக்கூடிய அளவிலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மாணவி தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. இதனிடையே, அவர்கள் இருவரும் தற்போது சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

