ETV Bharat / state

ரூ. 1 கோடி மதிப்புடைய கஞ்சா ஆயில் பறிமுதல்: போலீசாரை பாராட்டிய நெல்லை டிஐஜி

கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றை முற்றிலும் தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு "DrugFreeTN” எனும் செயலியை உருவாக்கியுள்ளது.

திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர்  பி.சரவணன் சார்பு ஆய்வாளர் முத்துராஜா
சார்பு ஆய்வாளர் முத்துராஜாவை பாராட்டிய திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பி.சரவணன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 9, 2026 at 4:58 PM IST

1 Min Read
Choose ETV Bharat

தூத்துக்குடி: ரோந்து பணியின் போது 1 கோடி ரூபாய் மதிப்புடைய கஞ்சா ஆயில் வைத்திருந்த இருவரை கைது செய்த போலீசாரை திருநெல்வேலி டிஐஜி நேரில் அழைத்து பாராட்டினார்.

தூத்துக்குடி, தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் அருளப்பன் தலைமையில் நேற்று முன் தினம் (ஜன 7) ஆம் தேதி சார்பு ஆய்வாளர் முத்துராஜா, சிறப்பு சார்பு ஆய்வாளர் சிவன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோயில் பிள்ளைவிளை சந்திப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருவர் இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தனர். பின்னர், அவர்களை பிடித்து சோதனை செய்ததில் அவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜேஷ் (39) மற்றும் பிரான்சிஸ்(22) என்பதும், அவர்கள் கஞ்சா ஆயில் வைத்திருந்தது தெரிய வந்தது.

உடனடியாக போலீசார் அவர்களை தாளமுத்துநகர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். இது குறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் அருளப்பன் வழக்குப்பதிவு இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா ஆயில் மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும், கஞ்சா ஆயில் வைத்திருந்தவர்களை கைது செய்தும், பொருட்களை பறிமுதல் செய்தும் சிறப்பாக பணியாற்றிய தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் வெகுவாக பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பழக்கத்தை குறைக்கும் நோக்கத்தோடு, தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது தனி கவனம் செலுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுபோன்ற போதை பொருள்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவர் (டிஐஜி) பி.சரவணன், தாளமுத்து நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முத்துராஜா-வை பாராட்டி 2,000 ரூபாய் வெகுமதி அளித்தார்.