ETV Bharat / state

நீங்கள் இன்னும் சாகவில்லை - நல்லகண்ணுவின் மறைவை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த மூதாட்டி

85 வயதான சீதா, தான் பேசும்போது கம்யூனிஸ்ட் முழக்கமான ‘காம்ரேட்’ என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் அவர் இந்த இயக்கத்தில் எந்த அளவிற்கு தீவிரமாக இருந்தார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

நல்லகண்ணுவுடனான நினைவுகளை பகிர்ந்த மூதாட்டி சீதா
நல்லகண்ணுவுடனான நினைவுகளை பகிர்ந்த மூதாட்டி சீதா (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 26, 2026 at 9:05 AM IST

2 Min Read
Choose ETV Bharat

- By இரா. மணிகண்டன்

திருநெல்வேலி: கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் மறைவை கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்த மூதாட்டி ஒருவர், சிறு வயதில் நல்லகண்ணு தன்னை தோளில் தூக்கி சுமந்ததாக அந்த கால அனுபவங்களை வேதனையோடு பகிர்ந்து கொண்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு நேற்று காலமானார். இறுதி மூச்சு வரை மக்களுக்கான வாழ்ந்த நல்லகண்ணுவின் மறைவு, கம்யூனிஸ்ட் இயக்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசியல் உலகுக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அந்த வகையில், நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் வசித்து வரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தீவிர விசுவாசியான சீதா (85), நல்லகண்ணுவின் மறைவு கேட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார். சீதாவின் கணவர் ஆர்.வி. அனந்த கிருஷ்ணனும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக செயல்பட்டவர். சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்று சிறை சென்றவர். அம்பாசமுத்திரம் பகுதியில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட தலைவர்களில் அனந்த ராமகிருஷ்ணன் மிக முக்கியமானவராக திகழ்ந்தார்.

அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் தொடங்கப்பட்ட பிறகு அதன் முதல் தலைவராக அனந்த கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் சீதாவும் சிறு வயதிலிருந்தே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக பணியாற்றியவர். எனவே ஆனந்த கிருஷ்ணன் சீதாவை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகும் இருவரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டனர். அப்போது தான் நல்லகண்ணுவின் பழக்கம் ஏற்பட்டது. நல்லகண்ணு அடிக்கடி அனந்த கிருஷ்ணன் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

நல்லகண்ணு உருவபடத்திற்கு மரியாதை செலுத்தும் சீதா
நல்லகண்ணு உருவபடத்திற்கு மரியாதை செலுத்தும் சீதா (ETV Bharat Tamil Nadu)

இதனால் அவர் குடும்ப நண்பராகவே மாறிவிட்டார். கடந்த 2001ஆம் ஆண்டு அனந்த கிருஷ்ணன் மறைந்த நிலையில் சீதா மற்றும் அவரது குழந்தைகள் அடிக்கடி நல்லகண்ணுவை சந்தித்து வந்தனர். சமீபத்தில் கூட சீதாவின் மகள் ரேவதி, சென்னை சென்று நல்லகண்ணுவிடம் நலம் விசாரித்தார். இது போன்ற சூழ்நிலையில் நல்லகண்ணு உயிரிழந்த செய்தியை மகள் ரேவதி சீதாவிடம் கூறியபோது அவர் மிகவும் வருத்தம் அடைந்தார்.

மூதாட்டி சீதாவின் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

அதனைத் தொடர்ந்து, நல்லகண்ணுவின் உருவப்படத்திற்கு சீதா மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது அவர் தனது சிறு வயது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக தன்னை நல்லகண்ணு தோளில் தூக்கி சுமந்ததாக கூறி, “இப்படி அவசரப்பட்டு சென்று விட்டீர்களே...” என்று ஏக்கத்தோடு தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

அதாவது சீதா குழந்தையாக இருந்தபோது நல்லகண்ணு அடிக்கடி அவருடைய வீட்டு வந்து சென்றுள்ளார். அப்போது சீதாவின் கட்சிப் பணியை பாராட்டி அவரை தட்டிக் கொடுத்துள்ளார். அந்தப் பழைய நினைவுகளை தான் சீதா வேதனையோடு வெளிப்படுத்தினார். மேலும் சீதா பேசும் போதெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியின் முழக்கமான ‘காம்ரேட்’ என்ற வார்த்தையை அயராத வயதிலும் அழுத்தமாக கூறி வருகிறார். இதன்மூலம் அவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் எந்த அளவுக்கு தீவிரமாக இருந்தார் என்பதை நம்மால் உணர முடிந்தது. தொடர்ந்து சீதாவின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் நல்லகண்ணுவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.