என்னை யாரும் எதிரியாக பார்க்க வேண்டாம் - நெல்லை ஆட்சியர் நெகிழ்ச்சி பேச்சு
விவசாயிகளுக்காக எனது அலுவலகம் எப்போதும் திறந்தே இருக்கும். உங்களோடு ஒருவனாக இருந்து, உங்கள் பிரச்சனையை தீர்ப்பேன் என மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்தார்.

Published : July 5, 2026 at 7:51 AM IST
திருநெல்வேலி: மாணவனாக உங்களிடம் கற்றுக்கொள்ள வந்துள்ளேன், என்னை யாரும் எதிரியாக பார்க்க வேண்டாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் பேசியது விவசாயிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் வேளாண்மை துறை சார்பில் ‘ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத்தில் விவசாயிகள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த உழவர் விழாக்களைக் கொண்டாடுதல்’ என்ற நிகழ்ச்சி நேற்று (ஜூலை 4) நடைபெற்றது.
சேரன்மகாதேவி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “நான் நெல்லையில் பொறுப்பேற்றதும் என்னைப் பார்க்க வந்த முதல் ஆள் விவசாயிகள். முதல் புகாரே விவசாயிகள் கொடுத்த புகார் தான். நெல் கொள்முதல் செய்ததற்கான பணம் வரவில்லை என்பதுதான் நான் பொறுப்பேற்றவுடன் வந்த முதல் புகார்.
அப்போது ரூ.82 கோடி வரவேண்டியிருந்தது. மத்திய மாநில அரசுகளிடம் தொடர்ந்து பேசியதைத் தொடர்ந்து, தற்போது ரூ.50 கோடி ஒதுக்கியுள்ளனர். இன்னும் ரூ.32 கோடி வரவேண்டியுள்ளது. அதையும் ஒரே வாரத்தில் கொடுத்து விடுவதாக உறுதி அளித்துள்ளார்கள்” என்றார்.
| இதையும் படிங்க: எத்தனால் E20 குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் - இந்தியன் ஆயில் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி தகவல் |
மேலும் பேசிய ஆட்சியர், “எனக்கு விவசாயம், வேளாண்மைத்துறை என்பது புது துறை. எனவே, ஒரு மாணவனாக உங்களிடம் நிறைய கற்றுக் கொள்ள வந்திருக்கிறேன். உங்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டு, அடுத்தகட்டமாக விவசாயத்தை மேம்படுத்துவது எப்படி? விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவது எப்படி? என பல்வேறு சிந்தனைகள் வைத்துள்ளேன். அதை ஒவ்வொரு கட்டமாக நிறைவேற்றுவேன். நாம் சேர்ந்து பணியாற்றுவோம்.
மாவட்ட நிர்வாகத்தை யாரும் எதிரியாகப் பார்க்க வேண்டாம். உங்களுக்காக எனது அலுவலகம் எப்போதும் திறந்தே இருக்கும். உங்களோடு ஒருவனாக இருந்து, உங்கள் பிரச்சனையை தீர்ப்பேன்” என்றார்.
முன்னதாக, நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரம்பரிய உணவுப் பொருட்கள் அடங்கிய கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். தொடர்ந்து பயிர்க் காப்பீடு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார்.
ஆட்சியர் சுகுமார் இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஆனந்த் மோகன், ஜூன் 1 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

