ETV Bharat / state

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா; ராமேஸ்வரத்தில் இருந்து 4 ஆயிரம் பக்தர்கள் பயணம்

புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 26 நாட்டுப் படகுகள், 90 விசை படகுகள் மூலம் 3,996 பயணிகள் கச்சத்தீவுக்கு பயணித்துள்ளனர்.

கச்சத்தீவு திருவிழாவிற்கு வழியனுப்பி வைக்கப்பட்ட பக்தர்கள்
கச்சத்தீவு திருவிழாவிற்கு வழியனுப்பி வைக்கப்பட்ட பக்தர்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 27, 2026 at 12:15 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ராமநாதபுரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களின் படகுகளை ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கொடியசைத்து வழியனுப்பி வைத்தனர்.

இந்தியா - இலங்கை இருநாட்டு நல்லுறவை மேம்படுத்துவதில் முக்கிய கலாசார அம்சமாக திகழும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இந்த ஆண்டு இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு படகுகள் புறப்பட்டன. இதில் 26 நாட்டுப் படகுகளிலும், 90 விசை படகுகளிலும் 3,996 பயணிகள் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இந்தியாவில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன் (ETV Bharat Tamil Nadu)

இதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருக்கக்கூடிய பக்தர்களை மத்திய, மாநில உளவுப்பிரிவு போலீசார், சுங்கத்துறை அதிகாரிகள், கடலோர காவல் குழுமம் போலீசார், கியூ பிரிவு போலீசார் உள்ளிட்டோர் பக்தர்களை முழுமையாக பரிசோதனை செய்து இந்த புனித பயணத்திற்கு அனுமதித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன், ராமேஸ்வரம் கூடுதல் துணை கண்காணிப்பாளர் மீரா ஆகியோர் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்லக்கூடிய பக்தர்கள் கொண்ட படகுகளை கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன் ஈடிவி பாரத்திடம் கூறியபோது, “இந்த ஆண்டு கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் இந்தியாவில் இருந்து மொத்தம் 3,996 யாத்ரீகர்கள் பங்கேற்கின்றனர். இவர்களில் 3,031 ஆண்கள், 782 பெண்கள், மற்றும் 183 குழந்தைகள் அடங்குவர். இவர்கள் அனைவரும் 90 இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகுகள் மற்றும் 26 நாட்டுப் படகுகள் உட்பட 116 படகுகளை கச்சத்தீவு நோக்கிய தங்களின் பயணத்தை தொடங்கி உள்ளனர். இன்று காலை படகுகள் புறப்பாடு தொடங்கிய நிலையில், அனைத்து யாத்ரீகர்களும் மதியத்திற்குள் கச்சத்தீவை சென்றடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இந்த விழாவை சுமூகமாக நடத்துவது தொடர்பாக பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும் அனுமதிக்கப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் உட்பட பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நேற்று இறுதி விளக்கவுரை அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கச்சத்தீவு ஆலய திருவிழா நாளை தொடக்கம்: தமிழகத்தில் இருந்து 4 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

ராமேஸ்வரம் துறைமுகத்திற்கு வருகை தந்த பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் மொபைல் கழிப்பறைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனம் மற்றும் சுத்தமான குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது. உலர் பழங்கள், வெண்ணெய், பன் மற்றும் ஜாம் அடங்கிய உணவுப் பொட்டலங்களையும் பக்தர்களுக்கு அதிகாரிகள் விநியோகித்துள்ளனர்” என கூறினார்.