
Exclusive: 'வரும் தை பொங்கல் எங்கள் கிராமத்தில் தான்' - உறுதி எடுத்துக்கொண்ட நாட்டாகுடி மக்கள்!
வெகு சீக்கிரத்தில் வெளியேறி சென்ற அனைத்து குடும்பங்களும் நாட்டாகுடிக்கே திரும்புவார்கள் என்றும் திருசெல்வம் உறுதியளிக்க, வருகிற தைப் பொங்கலை அனைத்து குடும்பங்களும் ஒன்றிணைந்து நாட்டாகுடியில் கொண்டாடுவதாக மிக உற்சாத்துடன் கூறுகின்றனர் ஊர் மக்கள்.

Published : November 5, 2025 at 8:27 PM IST
- By இரா. சிவக்குமார்
“மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தோம். அவர் நாட்டாகுடிக்கே நேரடியாக வந்து ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர், பல்வேறு துறைகளையும் முடுக்கி விட்டார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருந்த நாட்டாகுடியின் நிலை, இன்று வெகுவாக மாறியுள்ளது” என்கிறார் 'மிஷன் ஐடி-ரூரல்' அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.திருசெல்வம்.
ஆம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை வேளாண்மை செய்ய முடியாத நிலை, பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால், “எத்தன நாளைக்குத் தான் உயிர கையில பிடிச்சுட்டு வாழுறது?” என கேள்வி எழுப்பியவாறு ஊரையே காலி செய்து மத்திய, மாநில அரசுகளுக்கு அதிர்ச்சி கொடுத்தனர் நாட்டாகுடி கிராம மக்கள்.
ஆனால் இப்போது ஒவ்வொரு குடும்பமாக நாட்டாகுடிக்கே திரும்ப ஆரம்பித்துள்ளனர். இந்த மாற்றம் அவ்வளவு எளிதில் நடந்துவிடவில்லை. இதற்காக அந்த கிராம மக்கள் எடுத்த முயற்சிக்கு அரசாங்கமும் முழு ஒத்துழைப்பு கொடுத்ததே முக்கிய காரணம்.
அடுத்து வருகிற பொங்கல் பண்டிகையை தங்கள் கிராமத்தில் வைத்து அனைத்து குடும்பங்களும் ஒன்று சேர்ந்து கொண்டாடப்போவதாக தெரிவிக்கின்றனர். ஆகஸ்ட் மாதம் வரை வறண்டு, இருண்டு, ஆள் அரவமற்று கிடந்த நாட்டாகுடியில் இந்த மூன்று மாதங்களுக்குள் என்ன நடந்தது?

நாட்டாகுடி சீரமைப்பு பணிகள்
கடந்த ஆகஸ்ட் மாதம் அடிப்படை வசதிகளின்றி அவதியுறும் நாட்டாகுடி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஊரை காலி செய்து வருவதாக ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் செய்தி வெளியிட்டது. அந்த செய்தியின் எதிரொலியாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி, உடனடி நடவடிக்கை மேற்கொண்டார். அவரும், பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளும் நாட்டாகுடிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், மக்கள் மீண்டும் அங்கு வாழ்வதற்கு ஏற்ற வகையில் விவசாயத்திற்கு ஏற்ப நில மேம்பாடு, தண்ணீர் வரும் வாய்க்கால்கள் சீரமைப்பு போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டனர்.
உடனடியாக அந்த பணிகள் தொடங்கப்பட்டு, ஏறக்குறைய 50 சதவீதத்திற்கும் மேலான பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது முதற்கட்டமாக 3 குடும்பங்கள் நாட்டாகுடிக்கு திரும்பியுள்ளன. மேலும் 10 குடும்பங்கள் தினசரி விவசாய பணிகளுக்காக வந்து செல்கின்றனர். மீண்டும் மனிதர்களின் சத்தம் அங்கு கேட்க தொடங்கியிருப்பது நாட்டாகுடி புதிய வளர்ச்சியை நோக்கி செல்வதை உறுதிப்படுத்தியுள்ளது.

விவசாயத்திற்கு தயாராகி வருகிறோம்
தங்களது கிராமம் முன்னேறி வருவது குறித்து நாட்டாகுடி பெரியவர் ராமர் கூறுகையில், “எங்கள் ஊரில் கடந்த 10 - 15 ஆண்டுகளாக விவசாயம் இல்லை. அத்துடன் சில சம்பவங்களும் நடந்து விட்டன. அதனால் நிறைய பேர் ஊரை விட்டே வெளியேறிவிட்டனர். 50 - 60 குடும்பங்கள் ஒற்றுமையாக வாழ்ந்த கிராமம் இது. இப்போது அரசாங்கம் கருவேல மரங்களை அகற்றி, வாய்க்கால் வரப்புகளை சரி செய்து கொடுத்திருக்கிறார்கள். மீண்டும் விவசாயத்திற்கு நாங்கள் தயாராகி வருகிறோம். ஊரை விட்டு போனவர்களையும் கூப்பிட தொடங்கியுள்ளோம். பழைய நாட்டாகுடியை கொண்டு வர ஏற்பாடுகள் செய்து வருகிறோம்” என்கிறார் மகிழ்ச்சியுடன்.
| இதையும் படிங்க: ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தி எதிரொலி: நாட்டாகுடி கிராம மக்களுக்காக அறிக்கை வெளியிட்ட ஆட்சியர்! |
இப்போது, ஊருக்குள் செல்லும் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. குடி தண்ணீருக்கான மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி சீரமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமன்றி, ஊரில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் கிராமத்திற்குள் ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவையெல்லாம் அந்த மக்களுக்கு ஓரளவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.
அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று தற்போது விவசாயம் செய்து வரும் முத்துக்குமார் என்ற பெரியவர் கூறுகையில், “நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் இந்த கிராமத்தில் தான். மழையில்லாமல், விவசாயமில்லாமல் 50 குடும்பங்கள் வெளியேறி விட்டன. அதையும் மீறி செய்த விவசாயத்திலும் காட்டுப்பன்றி, மாடுகளினால் சேதம் ஏற்பட்டுவிட்டது.
ஆட்சியர் உத்தரவின் பேரில் துரிதபடுத்தப்பட்டுள்ள பணிகள்
சிவகங்கை ஆட்சியர் நேரில் வந்து எங்கள் கிராமத்தை ஆய்வு செய்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தண்ணீர், சாலை, விளக்கு வசதிகளெல்லாம் செய்துள்ளனர். விவசாயத்திற்கு ஏற்றவகையில் மண்டிக்கிடக்கிற நிலங்களில் முதற்கட்டமாக 25 ஏக்கர் நிலத்தை ரூ. 2 லட்சம் செலவில் சுத்தம் செய்துள்ளனர்.
கண்மாயில் இருக்கிற 3 மடைகளிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் போகிற வகையில் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டிருக்கின்றன. மேலும் காட்டு விலங்குகள் வயல்களுக்குள் வராத வகையில் கம்பி வேலி அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ. 12 லட்சம் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது” என்கிறார்.
அதே ஊரைச் சேர்ந்த பெரியவர் ராமலிங்கம், தற்போது சிவகங்கையில் வசித்து வருவதாகவும், தனது உடல்நிலையும், பொருளாதாரமும் சரியில்லாத காரணத்தால் மீண்டும் நாட்டாகுடிக்கே திரும்புவதை தவிர தனக்கு வேறு வழியில்லை என்றும் கூறுகிறார்.
'மிஷன் ஐடி-ரூரல்' (Mission IT-Rural) என்ற அமைப்பின் மூலம் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் ஆதரவோடு அங்குள்ள கிராமங்களில் விவசாய மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வரும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் திருசெல்வம், நாட்டாகுடி கிராமத்தை சீரமைக்கும் பணிகளை சிவகங்கை ஆட்சியர் பொற்கொடியின் அனுமதியோடு மேற்கொண்டு வருகிறார்.
நாட்டாகுடியில் தான் அடுத்த பொங்கல் பண்டிகை
அவர் கூறுகையில், “நாட்டாகுடியின் நிலையை அறிந்த பிறகு, அதற்கு முன்னுரிமை கொடுத்து தற்போது பணியில் இறங்கியுள்ளோம். இந்த கிராமத்திலுள்ள சிக்கல்கள் மற்ற கிராமங்களுக்கும் எதிர்மறையான சூழலை உருவாக்கிவிடக் கூடாது என்பது தான் எங்களுடைய முதல் நோக்கம். மூன்று முறை நாட்டாகுடி மக்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தினோம்.
அவர்களிடம் நடத்திய கலந்துரையாடல், நாங்கள் மேற்கொண்ட ஆய்வு ஆகியவற்றின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தோம். அதன் அடிப்படையில் நாட்டாகுடியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் பணிகளை முடுக்கியுள்ளார். இதுவரை நிலம் சீரமைப்பு, கிராம பாதுகாப்பு, மின்சாரம், தண்ணீர் போன்ற வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தன்னார்வலர்களின் பங்கேற்புடன் தற்போது 25 ஏக்கர் விவசாய நிலங்களில் கருவேல மரங்களை அகற்றும் பணி நிறைவடைந்துள்ளது. விவசாய நிலங்களில் காட்டு விலங்குகள் புகாமல் இருக்க கம்பி வேலி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருந்த நாட்டாகுடியின் நிலை, இன்று வெகுவாக மாறியுள்ளது” என்கிறார் பெருமையுடன்.
மேலும் வெகு சீக்கிரத்தில் வெளியேறி சென்ற அனைத்து குடும்பங்களும் நாட்டாகுடிக்கே திரும்புவார்கள் என்றும் திருசெல்வம் உறுதியளிக்க, வருகிற தைப்பொங்கலை அனைத்து குடும்பங்களும் ஒன்றிணைந்து நாட்டாகுடியில் கொண்டாடுவதாக மிக உற்சாத்துடன் கூறுகின்றனர் ஊர் மக்கள்.

