ETV Bharat / state

நல்லக்கண்ணு உடல் சென்னை மருத்துவக் கல்லூரியிடம் ஒப்படைப்பு

இறந்த பிறகு தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக சென்னை மருத்துவக் கல்லூரியிடம் கொடுக்க வேண்டும் என கடந்த 2016 ஆம் ஆண்டு நல்லகண்ணு விருப்பம் தெரிவித்திருந்தார்.

நல்லக்கண்ணு உடல் ஒப்படைப்பு
நல்லக்கண்ணு உடல் ஒப்படைப்பு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 26, 2026 at 7:44 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல் மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக சென்னை மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைக்கப்பட்டது.

சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (101) நேற்று காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அவரது உயிர் பிரிந்தது.

நல்லகண்ணு மரணம் குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "உடல்நலக் குறைவு காரணமாக, 1.2.2026 அன்று நல்லக்கண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 24 தினங்களாக சிகிச்சையின்போது அவரது உடல்நிலையில் ஏற்றதாழ்வுகள் இருந்து வந்தன. பல்துறை மருத்துவக்குழு தீவிர சிகிச்சையும், அதிதீவிர கண்காணிப்பையும் தொடந்து வந்தனர். இன்று அதிகாலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்து, அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால், நல்லக்கண்ணு (25. 2.2026) இன்று பிற்பகல் 1.55 மணியளவில் நம்மை விட்டு பிரிந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்" என தெரிவித்திருந்தது.

நல்லக்கண்ணு உடலை பெற்றுக்கொண்டதற்கான சான்றிதழ் அளிக்கும் சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தாராமன்
நல்லக்கண்ணு உடலை பெற்றுக்கொண்டதற்கான சான்றிதழ் அளிக்கும் சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தாராமன் (ETV Bharat Tamil Nadu)

அதனைத் தொடர்ந்து அவரது உடல் எம்பார்மிங் செய்யப்பட்டு நேற்று மாலை 5 மணி அளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தி.நகரில் உள்ள சிபிஐ தலைமையகமான பாலன் இல்லத்தில் உடல் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சியின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

நல்லக்கண்ணு உடல் சென்னை மருத்துவக் கல்லூரியிடம் ஒப்படைப்பு (ETV Bharat Tamil Nadu)

அதனைத் தொடர்ந்து இன்று மதியம் 3 மணி அளவில் 72 குண்டுகள் முழங்க அவருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவரது உடல் ஊர்வலமாக சென்னை மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்பட்டது. அங்கு நல்லகண்ணுவின் மகள்களான காசிபாரதி மற்றும் ஆண்டாள் தங்களின் இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

தொடர்ந்து மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக அவரது உடலை உறவினர்களிடமிருந்து சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தாராமன், உடற் கூறுயியல் துறை தலைவர் தீபா பென்ட்லி , மருத்துவ மாணவர்கள் பெற்றுக் கொண்டனர்.

இறந்த பிறகு தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக சென்னை மருத்துவக் கல்லூரியிடம் கொடுக்க வேண்டும் என கடந்த 2016 ஆம் ஆண்டு நல்லகண்ணு விருப்பம் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் அவரது உடல் இன்று மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்பட்டது.