ETV Bharat / state

பாஜகவில் இருந்து 30 பேர் எம்எல்ஏக்கள்; வி.பி. துரைசாமி அமைச்சர் - நயினார் நாகேந்திரன் பேச்சால் சலசலப்பு

பாஜகவை சேர்ந்த வி.பி. துரைசாமி அமைச்சர் ஆவார் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ள நிலையில், ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை பாஜக முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நயினார் நாகேந்திரன் (கோப்புப்படம்)
நயினார் நாகேந்திரன் (கோப்புப்படம்) (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 26, 2026 at 3:13 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, பாஜகவை சேர்ந்த 20 முதல் 30 பேர் எம்எல்ஏக்களாக சட்டமன்றத்துக்குள் நுழைவார்கள் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையே இன்னும் தொடங்கப்படாத நிலையில், 30 பாஜக எம்எல்ஏக்கள் என நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வி.பி. துரைசாமி அமைச்சராவார் எனவும் அவர் கூறுவதால் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையையும் பாஜக முன்வைக்கக் கூடும் எனத் தெரிகிறது.

சென்னை அமைந்தகரையில் பாஜக மாநில தேர்தல் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இதனை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்கு பின்னர், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், "வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். இப்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சியை அகற்ற மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். இது மக்களுக்கான ஆட்சியாக நடைபெறவில்லை. குடும்ப ஆட்சியாக செயல்படுகிறது.

இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. டிஜிபியை கூட நியமிக்க முடியாமல் அரசு திணறுகிறது. புத்தகம் எடுத்து செல்ல வேண்டிய பள்ளி, கல்லூரி மாணவர்களின் கையில் தற்போது கஞ்சா இருக்கிறது. சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை.

சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிடப்படும் என வாக்குறுதி கொடுத்தார்கள். அதை செயல்படுத்தவில்லை. அரசு ஊழியர்களுக்கு பழைய ஒய்வூதியத் திட்டத்தை கொடுப்பதாக கூறினார்கள். அதையும் செய்யவில்லை. இதனால் திமுக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

அடுத்த முறை எடப்பாடி பழனிசாமிதான், முதலமைச்சராக பதவியேற்க போகிறார். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செய்து கொடுத்துள்ளது. 11 வந்தே பாரத் ரயில்கள், தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம் என பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செய்து வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்து சென்ற பிறகு, அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும். எடப்பாடி பழனிசாமியுடன் எங்கள் தலைவர்கள் வந்து பேசுவார்கள். எங்களை பொறுத்தவரை, பாஜகவில் இருந்து 20 முதல் 30 பேர் சட்டமன்றத்துக்குள் எம்எல்ஏக்களாக நுழைவார்கள். வி.பி. துரைசாமி அமைச்சராவார்" என நயினார் நாகேந்திரன் கூறினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. அப்படியிருக்கும் போது, 30 பேர் வரை எம்எல்ஏக்களாக சட்டமன்றம் செல்வார்கள் என்றும், வி.பி. துரைசாமி அமைச்சர் ஆவார் எனவும் நயினார் நாகேந்திரன் பேசியிருப்பது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.