'உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க எதையும் செய்ய திமுக அரசு தயாராகிவிட்டது' - நயினார் நாகேந்திரன்
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Published : January 6, 2026 at 6:13 PM IST
திருநெல்வேலி: உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க எதையும் செய்ய திமுக அரசு தயாராகிவிட்டது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை பிறப்பித்த தீர்ப்பை வரவேற்று நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து கூறும் போது, ''தேசிய ஜனநாயகக் கூட்டணி விரைவில் பலம் வாய்ந்த கூட்டணியாக அமையும். ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று உத்தரவாதத்தை அமித்ஷா கூறியுள்ளார்.
100 நாள் வேலை திட்டத்தை நிறுத்தி விட்டதாக திமுக, காங்கிரஸ் கட்சியினர் சொல்லி வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் 100 நாள் 150 நாளாக மாற்றப்படும் என சொன்னார்கள். ஆனால், பாஜக அரசு 100 நாளை 125 நாளாக உயர்த்தி வழங்கி வாரம் ஒரு முறை ஊதியம் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
100 நாள் திட்ட பணியாளர்களை திமுகவினர் அவர்களது வீட்டு வேலைக்கு பயன்படுத்தி வந்தனர். இந்த திட்டத்தில் அதிகமான குளறுபடிகள் நடைபெற்று வந்தது. இப்போது திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. விவசாயப் பணிகளுக்கு 100 நாள் திட்டம் பயன்படுத்துவதுடன் வெள்ளம், மழை காலத்தில் அரசு பணிகளுக்கும் அவர்களை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 100 நாள் திட்டத்தில் வேலைக்கு செல்லாமல் ஊதியம் எடுத்தது தற்போது தடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
மேலும் பேசிய அவர், "திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. ஆளும் கட்சி இந்த விவகாரத்தில் சதி செய்தது. முதல்வர் தரப்பில் இவ்விவகாரத்தில் மதக்கலவரம் வரும் என தெரிவிப்பது, அவர்களே மதக்கலவரத்தை தூண்டுவதாக தான் எடுத்துகொள்ளப்படும். விளக்கு ஏற்றும் விவகாரத்தில் ஆளும் கட்சி நடந்த விதம் மோசமானது. மத கலவரத்தை தூண்டுவது முதல்வரா? என கேள்வி எழுந்துள்ளது. விளக்கேற்றும் விவகாரம் மட்டுமல்ல. எல்லா திட்டத்திலும் தமிழக அரசுக்கு தோல்வி தான் கிடைத்துள்ளது. ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கு அரசாணை கொடுக்கவில்லை. ஓய்வூதிய திட்டம் ஜூனில் அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர்.
ஜூன் மாதத்தில் தமிழகத்தில் மக்கள் முதல்வர் தான் ஆட்சியில் இருப்பார். முதல்வரின் அறிவிப்பு குதிரைக்கு கொள்ளு கொடுத்து ஏமாற்றுவது போல் அமைந்துள்ளது. மக்களின் முதல்வராக தேசிய ஜனநாயகக்கூட்டணி கட்சியின் தமிழக தலைவரான எடப்பாடி பழனிசாமி இருப்பார். பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கப்படும். காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடர்ந்து இருப்பதற்கான சாத்தியம் இருப்பதாக தெரியவில்லை. மந்திரி சபையில் இடம் கேட்பதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது. திமுக ஆட்சி ஊழல் ஆட்சி. குடும்ப ஆட்சி.
| இதையும் படிங்க: திமுக ஆட்சியில் ரூ.4.5 லட்சம் கோடி ஊழல் - ஆளுநரை சந்தித்து மனு அளித்த எடப்பாடி பழனிசாமி |
உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க எதையும் செய்ய அரசு தயாராகி விட்டது. கடந்த ஆண்டு பொங்கலுக்கு திமுக அரசு பரிசு தொகுப்பு கொடுக்காமல் இந்த ஆண்டு ₹3000 தருவதாக தேர்தலுக்காக அறிவித்துள்ளது. எனக்கு செந்தில் பாலாஜி மீது எவ்வித காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. அவரை இப்போது நேரில் சந்தித்தாலும் அவருடன் பேசுவேன். எனது கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை எனக்கூறி அதிகமாக பேசியுள்ளார். அவரது விமர்சனத்திற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை'' என தெரிவித்தார்.

