''ஜனநாயகன் விவகாரம்'' - நயினார் நாகேந்திரன் பரபரப்பு விளக்கம்
சென்சார் போர்டுக்கு என்று ஒரு சில விதிமுறைகள் இருக்கின்றன. ராணுவத்தில் சில விதிமுறைகள் இருக்கின்றன. ஒரு சில காட்சிகளை காட்டலாம். சில காட்சிகளை காட்டக்கூடாது என்று இருக்கிறது.

Published : January 9, 2026 at 8:24 PM IST
கோயம்புத்தூர்: ஜனநாயகன் திரைப்பட சென்சார் விவகாரத்திற்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், 'பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவர் நபின் நிதின் வருகிறார். கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சிக் கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். நாளை மறுதினம் மருதமலை கோயிலுக்கும், பேரூர் ஆதீனத்துக்கும் செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் மத்திய குழு வழக்கமாக நடைபெறும். பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வரும்போது தமிழகத்தின் அரசியல் நிலவரம் குறித்து அதில் கருத்துக்களை சொல்வோம். இங்கே உள்ள நிலைமைகளை அவர் தெரிந்து கொள்வார்கள்.
அதிமுகவுடன் தொகுதி பங்கீடு இதுவரை பேசவில்லை. அமலாக்கத் துறை, வருமான வரித் துறையைப் போல சென்சார் போர்டையும் மத்திய அரசு பழிவாங்க பயன்படுத்துகின்றதா? என்பது தவறான கேள்வி. அமலாக்கத் துறை, வருமானவரித் துறை தனி அமைப்புகள். இதில் பாரதிய ஜனதா கட்சிக்கு எந்த தொடர்பும் கிடையாது.
ஜனநாயகன் திரைப்பட விவகாரத்திற்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. சென்சார் போர்டுக்கு என்று ஒரு சில விதிமுறைகள் இருக்கின்றன. ராணுவத்தில் சில விதிமுறைகள் இருக்கின்றன. ஒரு சில காட்சிகளை காட்டலாம். சில காட்சிகளை காட்டக்கூடாது என இருக்கிறது.
ஜனநாயகன் திரைப்படத்தை முழுமையாக பார்த்தால் தான் தெரியும். சென்சார் போர்டு உறுப்பினர்கள் படத்தை பார்த்து கருத்து சொல்லி இருக்கிறார்கள். அது சரியா? தவறா? என்ற விவகாரத்திற்கு நாங்கள் போகவில்லை. பாஜகவிற்கும், அதற்கும் எந்த தொடர்பும் கிடையாது.
பாஜக கூட்டணிக்கு தேமுதிக வரும் என எதிர்பார்க்கிறோம். அதற்கான முடிவு அவர்கள் கையில் தான் உள்ளது. பராசக்தி படத்தை நான் பார்க்கவில்லை. நீங்களும் பார்த்து இருக்க மாட்டீர்கள். ட்ரெய்லரில் போடுவதை பார்த்து உறுதியாக சொல்ல முடியாது. தற்போது அனைத்து மொழிகளையும் படிக்க மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
கோவையில் யாரெல்லாம் போட்டியிடுகிறார்கள்? என அகில இந்திய தலைமை முடிவு செய்யும். நாங்கள் விருப்பத்தை கூறுவோம். அகில இந்திய தலைமை முடிவு செய்யும். காங்கிரஸ் கட்சி விஜய் பக்கம் போய்க் கொண்டு இருக்கிறார்கள் என்பது உங்கள் வார்த்தையில் இருந்து தெரிகிறது.
எங்கெல்லாம் போட்டியிடப் போகிறோம்? என்பது கூட்டணி தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தின் தலைவர் எடப்பாடி பழனிசாமி. கூட்டணியில் யாரை சேர்ப்பது? என்பது அவரது முடிவு.
கடந்த தேர்தலின் போது திமுக 532 பொய்யான தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தார்கள். ஜாக்டோ ஜியோவிற்கு உறுதிமொழி கொடுத்திருந்தனர். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவதாக சொன்னார்கள். ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகளில் கொடுக்கவில்லை. இப்பொழுது பேச்சுவார்த்தையில் ஜூன் மாதம் தருவதாக சொல்லி இருக்கின்றனர். ஜூன் மாதத்தில் திமுக ஆட்சியில் இருக்காது. இது எவ்வளவு பொய்யானது. முழு பூசணியை சோற்றில் மறைப்பது போல. இது போன்ற பொய்யை உலகத்தில் யாரும் சொல்ல முடியாத அளவில் சொல்வது திமுக.
ராமதாஸ் திமுக பக்கம் சாய்கிறாரா? என அவரிடம் தான் கேட்க வேண்டும். விஜய் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்தால், அசைக்க முடியாத சக்தியாக இருப்பார் என்று தமிழிசை பேசியிருப்பது அவருடைய சொந்த கருத்து.
அமித் ஷாவை டிடிவி தினகரன் சந்தித்தாரா? என்பது எனக்கு தெரியாது. பாஜகவிற்கு யாரையும் அடிபணிய வைக்க வேண்டிய தேவை இல்லை. அது போன்ற வேலைகளில் ஈடுபடுவது கிடையாது. இனி மேலும் இருக்காது'' என்றார்.

