ETV Bharat / state

அண்ணாமலை ராஜினாமா கடிதம் இதுவரை எனக்கு வரவில்லை; ட்விஸ்ட் வைத்த நயினார் நாகேந்திரன்

எதிர்கட்சியினர் குறைகளை சுட்டிக் காட்டினால், பதிலுக்கு முதலமைச்சர் விஜய் ’எங்களுக்கு வாயில் வந்துவிடும்’ என்று கூறுவதை தவிர்க்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 4, 2026 at 3:38 PM IST

2 Min Read
Choose ETV Bharat

திருநெல்வேலி: அண்ணாமலையின் ராஜினாமா கடிதம் இதுவரை எனக்கு வரவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "உலகத்தின் மிகப்பெரிய தலைவர் நரேந்திர மோடி. அனைத்து நாடுகளுக்கும் சென்று இந்தியாவிற்கு தேவையான பொருள்களை பெற்று தந்து கொண்டிருக்கிறார். கடுமையான போர் சூழலிலும் இந்தியாவிற்கு தேவையான பொருட்கள் கிடைக்க பிரதமர் மோடி வழிவகை செய்து வருகிறார்” என்றார்.

அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவதாக வெளியான தகவல் குறித்து பேசுகையில், “அண்ணாமலை எனது இனிய நண்பர். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய கட்சி தொடங்குவது குறித்து அவரும் யாரிடமும் பேசவில்லை, நாங்களும் அவரிடம் பேசவில்லை. அவர் ராஜினாமா செய்ததற்கான எந்த கடிதமும் மாநிலத் தலைவர் என்ற முறையில் என்னிடம் கொடுக்கவில்லை. எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. தற்போது வரை கட்சிரீதியாக வழக்கம் போல் பேசிக் கொண்டிருக்கிறோம். மேலும் குடும்ப விஷயங்கள் மற்றும் வேறு சில விஷயங்களை பேசி இருக்கிறோம்” என்றார்.

தவெக அரசை விமர்சித்து பேசிய நயினார் நாகேந்திரன், “முதலமைச்சர் விஜய் தனது அரசை சிறுபான்மை அரசு என்று கூறுகிறார். எந்த அடிப்படையில் அதனை கூறுகிறார் என்று தெரியவில்லை. கடந்த திமுக ஆட்சிக்கும், இந்த ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தமிழ்நாட்டில் கடந்த 23 நாட்களில் 25 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. மேலும் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

15-க்கும் மேற்பட்ட படுகொலை சம்பவங்கள், பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் கடையில் தவெக நிர்வாகிகள் மாமூல் வாங்க தொடங்கிவிட்டனர். முதலமைச்சர் என்பவர் பொறுப்போடு பேச வேண்டும். எதிர்க்கட்சிகள் என்ற முறையில் அரசின் குறைகளை சுட்டி காட்டுவதற்கு, அனைத்து கட்சியினருக்கும் உரிமை உள்ளது. அவர்கள் சொல்லும் கருத்துக்கு முதலமைச்சர் ’எங்களுக்கு வாயில் வந்துவிடும்’ என்று கூறுகிறார். இதுபோன்ற வார்த்தைகளை அவர் இனிமேலாவது தவிர்க்க வேண்டும். அவர் தனக்கான பொறுப்பை உணர்ந்து நடந்து கொண்டதாக தெரியவில்லை. அவர் முதலமைச்சர் ஆனது அவருக்கே ஆச்சரியமாக உள்ளது” என்றார்.

சென்னையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் காணாமல் போனது குறித்து பேசுகையில், “மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் காணாமல் போயுள்ளது. ஒப்பந்தத்தில் 400 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளது. முதலமைச்சர் பொறுப்பில் இருந்து விஜய் தவறிவிட்டார்" என்றார்.

இதையும் படிங்க: அனுமதியின்றி குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்த தவெகவினர் - அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்

மேலும் அவர் பேசுகையில், “நான் டெல்லி சென்று, அகில இந்திய பாஜக தலைவரை சந்தித்தேன். நான் மத்திய அமைச்சராவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. முதலமைச்சர் விஜய்யின் த.வெ.க. காங்கிரஸ் கட்சியின் பினாமியாக செயல்படுகிறது. இப்போது தமிழ்நாட்டில் உருவாகி உள்ள இடைத்தேர்தல் சூழல் என்பது தேவையில்லாதது. தேர்தல் முடிந்து 20 நாட்களில் இடைத்தேர்தல் என்பது ஏற்க முடியாதது. அதிமுக அல்லது பாஜகவுடன் திமுகவுக்கு உறவு என்ற கேள்வி எழ வேண்டிய அவசியம் இல்லை. வருகிற இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாடு குறித்து அகில இந்திய தலைமை முடிவெடுக்கும்" என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.