நீர்த்தேக்கத் தொட்டியில் பெண்ணின் உடல் பாகங்கள் - சேலத்தில் கொடூரம்; கொலையாளிகளுக்கு வலைவீச்சு
குளிப்பதற்காக தண்ணீர் குழாயை திறந்த போது துர்நாற்றம் வீசியதால், சந்தேகித்த ரமேஷ் என்பவர் மாடியில் உள்ள சின்டெக்ஸ் தொட்டியை பார்த்த போது அதிர்ச்சியடைந்தார்.

Published : August 31, 2026 at 1:55 PM IST
|Updated : August 31, 2026 at 2:50 PM IST
சேலம்: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து, உடல் பாகங்களை மூட்டையாக கட்டி நீர்த்தேக்கத் தொட்டியில் போடப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாநகர் அரிசிப்பாளையம் குணபாலன் தெருவில் உள்ள சிவன் கோயிலில் ரமேஷ் என்பவர் பூசாரியாகப் பணியாற்றி வருகிறார். நூற்றாண்டுகள் பழமையான இந்த சிவன் கோயிலுக்குச் சொந்தமான கட்டடத்தில், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ரமேஷ் தன் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, தனது பிறந்தநாளையொட்டி வீட்டைப் பூட்டி விட்டு தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் உள்ள கோயில்களுக்குச் ஆன்மிக பயணமாக சென்றுவிட்டு, இன்று காலை ரமேஷ் வீடு திரும்பி உள்ளார். வீடு திரும்பிய அவர், குளிப்பதற்காக தண்ணீர் குழாயைத் திறந்த போது அதிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது.
தண்ணீர் தொட்டியில் கிடந்த மூட்டை
இதனால் சந்தேகமடைந்த அவர், மொட்டை மாடிக்குச் சென்று அங்கிருந்த நீர்த்தேக்கத் தொட்டியைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது தொட்டிக்குள் மூட்டை ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.
அந்த மூட்டையை அவிழ்த்துப் பார்த்தபோது, அதற்குள் மனிதக் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டு பதறிப் போனார். என்ன செய்வதென்றே தெரியாமல் அதிர்ச்சியில் இருந்த அவர், உடனடியாக சேலம் மாநகர் பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கொலையாளியை தேடும் போலீஸ்
அங்குள்ள இரண்டு தண்ணீர் தொட்டிகளிலும் தனித்தனியாக இரண்டு மூட்டைகள் கிடந்துள்ளன. ஒரு மூட்டையில் கை மற்றும் கால் உள்ளிட்ட உடல் பாகங்களும், மற்றொரு மூட்டையில் தலைப் பகுதியும் கண்டெடுக்கப்பட்டன. இந்த உடல் ஒரு பெண்ணின் உடல் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
| இதையும் படிங்க: ‘தாய் கைகட்டி நின்றதால் மன உளைச்சல்’ - மதுரை அரசுப் பள்ளி மாணவி விபரீத முடிவு: தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு |
இக்கொடூரக் கொலையைச் செய்தது யார் என்பது குறித்துப் பள்ளப்பட்டி போலீசார் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நீர்த்தேக்க சின்டெக்ஸ் தொட்டியில் பெண்ணின் உடல் பாகங்கள் மூட்டையில் கட்டி போடப்பட்டிருந்த கொடூர சம்பவம் சேலம் மாநகரில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

