ETV Bharat / state

அரசு மருத்துவமனையில் தந்தைக்கு சிகிச்சை; விடிய விடிய கூடவே இருந்து கவனித்த அமைச்சர் மதன் ராஜா

தனது தந்தையை நேரடியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்த அமைச்சர் மதன் ராஜா, இரவு முழுவதும் மருத்துவமனையிலேயே தங்கி இருந்தார்.

அரசு மருத்துவமனையில் தந்தைக்கு சிகிச்சை அளிக்கும் அமைச்சர் மதன் ராஜா
அரசு மருத்துவமனையில் தந்தைக்கு சிகிச்சை அளிக்கும் அமைச்சர் மதன் ராஜா (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2026 at 2:46 PM IST

1 Min Read
Choose ETV Bharat

திருநெல்வேலி: தமிழக அரசின் அறிவுரையை பின்பற்றி, சிறு, குறு தொழில்துறை அமைச்சர் மதன் ராஜா, தனது தந்தையை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து விடிய விடிய உடனிருந்து கவனித்துக் கொண்டார்.

தவெக அரசு ஆட்சி பொறுப்பேற்று சுகாதாரத்துறை அமைச்சராக அருண்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்துவது மற்றும் உயர் தர மேம்படுத்தப்பட்ட சிகிச்சையை அரசு மருத்துவமனைகளின் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது, அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தங்களது உடல் பரிசோதனை, சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ சேவைகளை அரசு மருத்துவமனைகளிலேயே மேற்கொள்ள வேண்டும் என்றும், தங்களது உறவினர்களுக்கும் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தார்.

மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிற உயிர் காக்கும் சிகிச்சைகள் குறித்தும், மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்தும் எடுத்துரைத்த அவர், அரசு ஊழியர்கள் அரசு மருத்துவமனைகளை நம்பி சிகிச்சை எடுத்தால் தான் பொதுமக்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு சிறு, குறு தொழில்துறை அமைச்சரான மதன் ராஜாவின் தந்தை பெருமாள், வயது மூப்பின் காரணமாக திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். முதலில் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டுசென்று சேர்த்துள்ளனர்.

இதையும் படிங்க: ‘நீ நல்லா சாப்பிட்டு இருக்க, நான் இன்னும் சாப்பிடல’ - பேருந்து நிலையத்தில் அமைச்சரின் பதிலால் முகம் சுளித்த பயணிகள்

பின்னர் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நேற்று (மே 27) இரவு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தனது தந்தையை நேரடியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்த மதன் ராஜா, இரவு முழுவதும் மருத்துவமனையிலேயே தங்கி இருந்தார். மேலும் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கையில் கூடவே இருந்து தேவையான சிகிச்சைகள் அனைத்தும் சரியாக அளிக்கப்படுகிறதா என்பதையும் கவனித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, இன்று காலை தனது மனைவியை தந்தைக்கு உதவியாக மருத்துவமனையில் இருக்க வைத்துவிட்டு, பின்னர் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். அரசின் அறிவிப்பை நடைமுறையில் பின்பற்றியதுடன், பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக அமைச்சர் மதன் ராஜா செயல்பட்ட இச்சம்பவம் பல தரப்பினரின் பாராட்டையும் பெற்றுள்ளது.