’திமுகவை குறை கூறாதீர்கள்; சரியாக ஆட்சி நடத்துங்கள்’: முதலமைச்சர் விஜய்க்கு கனிமொழி பதிலடி
திமுகவை குறை கூறுவதால், மக்கள் இங்கே நடக்கும் சட்டம் - ஒழுங்கு பிரச்சனைகளை எல்லாம் மறந்து விடமாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

Published : June 2, 2026 at 8:41 AM IST
தென்காசி: திமுகவை குறை கூறுவதை விடுத்து, சரியான ஆட்சி நடத்துவதற்கான வழிமுறைகளை கண்டறியுங்கள் என முதலமைச்சர் விஜய்க்கு அக்கட்சியின் எம்.பி. கனிமொழி அறிவுறுத்தியுள்ளார்.
வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் ராஜா போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில், அப்பகுதியில் சட்டமன்ற அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக துணை பொதுச் செயலாளரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி கலந்து கொண்டு, சட்டமன்ற அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து அங்கிருந்த செய்தியாளர்களை எம்.பி. கனிமொழி சந்தித்து பேசினார். அப்போது, ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் (JPC) அறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை. அந்த அறிக்கை முறையாகத் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே, இது குறித்து முழுமையான கருத்துகளைத் தெரிவிக்க முடியும்” என்றார்.
முதலமைச்சர் விஜய் தி.மு.கவை தொடர்ந்து விமர்சித்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, ”தவெக இன்று ஆளுங்கட்சியாக இருக்கிறது. அவர்கள் சரியான ஆட்சியை நடத்துவதற்கான வழிமுறைகளை தான் பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு, இன்னும் திராவிட முன்னேற்றக் கழகத்தையே குறை சொல்லிக் கொண்டிருக்க கூடாது. இப்படி திமுகவை குறை கூறுவதன் மூலம் மக்கள் இங்கே நடந்து கொண்டிருக்கக்கூடிய தவறுகள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை எல்லாம் மக்கள் மறந்து விடமாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, ”உங்களுக்குத் தான் நன்றாக தெரியுமே” என பதிலளித்தார்.
முன்னதாக, திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்தார். “கடந்த ஆட்சியில் போதைப்பொருள் கலாச்சாரத்தை உருவாக்கிவிட்டு, தற்போது நடைபெறும் குற்றங்களுக்கு என் மீது பழிபோடுகிறார்கள். திமுக தற்போது தீய சக்தி மட்டும் அல்ல, தூர சக்தியாக மாறிவிட்டது" என்றார்.
| இதையும் படிங்க: திருமண மேடைதான் திமுகவின் பிரச்சார மேடை- முதல்வர் விஜய் பேச்சுக்கு எழிலன் நாகநாதன் பதில் |
மேலும், தன்னை திமுகவினர் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும், அதுதான் தனக்கு எனர்ஜியை தருவதாகவும் முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.

