ETV Bharat / state

தேர்தல் நேரத்தில் பொய் செய்திகளை பரப்புவது தான் பாஜக வேலை - கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு

திமுக ஆட்சிக்கு வந்தால் கோயில் இடிக்கப்படுகிறது என்று இல்லாத பொய்யை பாஜகவினர் பரப்பி வருவதாக திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கூறியுள்ளார்.

எம்.பி கனிமொழி
எம்.பி கனிமொழி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 23, 2026 at 5:25 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: தேர்தல் நெருங்கும் நேரத்தில் பொய் செய்திகளை பரப்புவது தான் பாஜகவினர் வேலை என எம்.பி கனிமொழி கூறியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டரணி சமூக வலைதள பயிற்சி பாசறையில், திமுக துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டார். மேலும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் டி.ஆர்.பி. ராஜா, கயல்விழி செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த சமூக வலைத்தள பயிற்சி பாசறையில் தொகுதி அளவிலான வாட்ஸ் ஆப் குழுக்களை உருவாக்குதல், தேர்தல் நேரத்தில் செய்ய வேண்டிய சமூக வலைதள செயல்பாடுகள், வீடியோக்கள் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் பெண்களுக்கு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, “ஒவ்வொரு காலகட்டத்திலும் திமுக தன்னை எப்போதும் தகவமைத்துக் கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான பத்திரிகைகளை நடத்திய இயக்கம் என்றால் அது திமுக மட்டுமே. மேடை நாடகங்கள் வழியாக பல கருத்துக்களை மக்களிடையே சென்றடைய செய்தது திமுக. மேலும் இசை பாரம்பரியம் வழியாகவும் இயக்கத்தின் கருத்துக்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது

இயக்கத்தில் உள்ள பல எழுத்தாளர்கள், திரைப்படங்களை கையில் எடுத்து அதன் வழியாக திமுகவின் கருத்துக்களை மக்களிடத்தில் சேர்த்தனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் தொண்டர்களை அரசியல்படுத்த வேண்டும் என்று அதற்கான வழிகளை செய்தது திமுக. இயக்கத்தில் பலருக்கு முன்னால் தன்னுடைய 80 ஆவது வயதிலேயே சமூக வலைத்தளத்தில் கணக்கை தொடங்கியவர் கலைஞர்.

பெண்கள் ஒரு கருத்தை சொல்லும் போது இச்சமூகம் மோசமாகத் தான் சாடும், பெண்களுக்கு எது வலிக்குமோ, அது சம்பத்தப்பட்ட கருத்துக்களை அதிகம் பகிர்வார்கள். மீண்டும் பெண்களை சமையல் அறையில் வைத்து விட வேண்டும் என்று தான் கருத்துக்களை கூறுகிறார்கள். நீ ஒன்று சொன்னால் நான் பத்தடி முன்பு வருகிறேன் என்று சொல்லி நீங்கள் போக வேண்டும். பெண்கள் சுதந்திரமாக வெளியே செல்ல வேண்டும் என்பதற்காக மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை என பல்வேறு திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார்.

நம்முடைய முதலமைச்சரின் ஒரே எதிரி மத்திய பாஜக அரசு தான். திமுக ஆட்சி அமைந்து நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது, ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தால் கோயில் இடிக்கப்படுகிறது என்று இல்லாத பொய்யை பாஜகவினர் பரப்பி வருகின்றனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜகவினர் இவ்வாறு பொய் செய்திகளை அதிகம் பரப்புவார்கள். சிறிய ஊர்களில் கல்லூரிகளை உருவாக்கியவர் கலைஞர், தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகளில் 42 சதவீதம் பெண்கள் பணியாற்றி வருகின்றனர்” என்றார்.

இதையும் படிங்க: சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “சமூக வலைத்தளங்களில் தான் பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. நேற்று மரியாதை நிமித்தமாகத்தான் முதலமைச்சரை சந்தித்தேன். சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மிக சிறப்பாக நடந்து வருகிறது. தொடர்ந்து திமுகவுக்காக பெண்கள் அதிக அளவில் உழைத்து வருகிறார்கள், இந்த தேர்தலில் மிக அதிகமான திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் பெண்களுக்காக அறிவிப்பார் என்று நம்புகிறேன்” என்றார்.