ETV Bharat / state

தாமதமாகும் திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை; கனிமொழி டெல்லிக்கு அவசர பயணம்

காங்கிரஸ் கட்சி திமுக, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் என இரு கட்சிகளிடமும் ஒரே நேரத்தில் தேர்தல் கூட்டணி குறித்து பேசி வருவதாக கூறப்படுகிறது.

ராகுல் காந்தி, கனிமொழி - கோப்புப்படம்
ராகுல் காந்தி, கனிமொழி - கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 27, 2026 at 7:16 AM IST

2 Min Read
Choose ETV Bharat

பாண்டியராஜ்.ப

சென்னை: திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்காத நிலையில், திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி எம்.பி இன்று டெல்லி செல்கிறார்.

2026 தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் அமைக்கப்பட்ட தொகுதி பங்கீடு குழு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளிடம் ஏற்கெனவே முதற்கட்ட பேச்சு வார்த்தையை நிறைவு செய்துள்ளது. மேலும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய கட்சிகளிடம் இன்று (பிப்.27) திமுக தொகுதி பங்கீடு குழு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

ஆனால், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய பெரிய கட்சியான அகில இந்திய காங்கிரஸ் கட்சியிடம் திமுக தொகுதி பங்கீட்டு குழு, இன்னும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை.

இதையும் படிங்க: பாஜகவில் இருந்து 30 பேர் எம்எல்ஏக்கள்; வி.பி. துரைசாமி அமைச்சர் - நயினார் நாகேந்திரன் பேச்சால் சலசலப்பு

தொகுதி பங்கீடு மற்றும் தங்களின் நிலைப்பாடு தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் கடந்த வாரம் முதலமைச்சர் மு க ஸ்டாலினை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசி இருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளரான கிரிஷ் சோடங்கரும் கனிமொழியை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசி இருந்தார்.

இருப்பினும் காங்கிரஸ் கட்சி திமுக மற்றும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் என இரு கட்சிகளிடமும் ஒரே நேரத்தில் பேசி வருவதாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுக - காங்கிரஸ் இடையே அதிகாரப்பூர்வ தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படாமல் இழுப்பறி நீடித்து வருகிறது. இத்தகைய அரசியல் சூழலில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்பியுமான கனிமொழி இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். தலைநகரை நோக்கிய அவரது இந்தப் பயணம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

நாடாளுமன்ற நிலைக்குழு விஷயங்கள் தொடர்பாக ஆலோசிக்க கனிமொழி டெல்லி செல்வதாக கூறப்படுகிறது. இருப்பினும், காங்கிரஸ் உடன் கூட்டணியில் தொகுதி பங்கீடு உள்ளிட்ட மற்ற விவகாரங்கள் குறித்து இன்னும் சுமுகமான உடன்பாடு எட்டப்படாத நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமையை அவர் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, கடந்த மாத இறுதியில் (ஜன.28) காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை கனிமொழி டெல்லியில் சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.