அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரி அதிமுக எம்.பி வழக்கு
அமைச்சர் கே.என்.நேரு மீது நியாயமான முறையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக எம்பி இன்பதுரை கேட்டுக் கொண்டுள்ளார்.

Published : January 7, 2026 at 2:03 PM IST
சென்னை: அமலாக்கத் துறை ஆதாரத்தின் அடிப்படையில், அமைச்சர் கே.என். நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, அதிமுக எம்.பி இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு, அவரது துறையில் முறைகேடாக பணி நியமனம் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கே.என். நேரு மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமலாக்கத் துறை அதிரடியாக சோதனை நடத்தியது.
அந்த சோதனையின் முடிவில் வேலை வழங்குவதற்காக ரூ. 1,020 கோடி வரை முறைகேடு நடந்திருக்கலாம் என அமலாக்கத் துறை தெரிவித்தது. ஒப்பந்ததாரர்கள் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கமிஷன் தர வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டியதோடு, அதற்கு ஆதாரமாக குறுஞ்செய்திகள், படங்கள், ஒப்பந்ததாரர்களிடம் பணம் பெற்றதற்கான ஆதாரங்களை திரட்டியதாக அமலாக்கத்துறை கூறியது.
இது தொடர்பாக டிஜிபிக்கு, அமலாக்கத் துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அதில், 2,538 பேரிடம் ஒவ்வொரு பதவிக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை வசூலித்ததாக குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, 10 ரூபாய் நோட்டை அடையாளமாக வைத்து இந்த முறைகேடு அரங்கேறியுள்ளது. நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீடுகளில் அமலாக்கத் துறை மேற்கொண்ட சோதனையில் பல ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
| இதையும் படிங்க: போதைப்பொருளை ஒழிக்க விழுப்புரம் எஸ்.பி. அதிரடி திட்டம் - மஃப்டியில் களமிறங்கிய போலீசார் ரகசிய வேட்டை |
இந்த ஊழலால் தகுதியான நபர்கள் வேலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், இந்த விவகாரத்தில் தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை எழுதிய கடிதத்தின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.
பொதுமக்களின் நலன் கருதியும், நியாயமான முறையிலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் எழுதியிருந்தேன்.
ஆனால், கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி அளித்த புகார் மீது லஞ்ச ஒழிப்புத் துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு இன்பதுரை தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

