5 மாத குழந்தை உயிரிழப்பு – தாய் எடுத்த விபரீத முடிவு; காவல்துறை தீவிர விசாரணை
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரணாம்பட்டு காவல்துறையினர், தாய் மற்றும் குழந்தையின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

Published : February 26, 2026 at 6:57 PM IST
வேலூர்: 5 மாத குழந்தையுடன் தாய் உயிரிழந்த இந்த துயர சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பேரணாம்பட்டு அடுத்த நலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சரத்குமார். இவர் சென்னையில் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் மாவட்டத்தைச் சேர்ந்த பவித்ரா (23) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு ஹரிஷ் என்ற 5 மாத ஆண் குழந்தை இருந்தது. சரத்குமார் உடல் நலக்குறைவால் கடந்த நான்கு மாதங்களாக தணது வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை மீண்டும் பணிக்காக சென்னை சென்றுள்ளார்.
பின்னர், தனது மனைவி பவித்ராவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால், அருகில் வசிக்கும் பவித்ராவின் பாட்டி வள்ளியம்மாளை தொடர்பு கொண்டு வீட்டில் சென்று பார்க்குமாறு சரத்குமார் கேட்டுள்ளார். உடனடியாக வள்ளியம்மாள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அங்கு அறையில் 5 மாத குழந்தை உயிரிழந்த நிலையில் கிடந்ததையும், பவித்ரா தூக்கிட்டு விபரீத முடிவு செய்து கொண்டதையும் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
| இதையும் படிங்க: கே.என் நேரு மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் சிபிஐ விசாரணை கோர முடிவு - எம்.பி இன்பதுரை தரப்பு |
உடனடியாக, இது குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரணாம்பட்டு காவல்துறையினர், தாய் மற்றும் குழந்தையின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். தாய் முதலில் குழந்தையை கொன்றாரா? அல்லது குழந்தை பசியால் அழுது உயிரிழந்ததா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பவித்ரா விபரீத முடிவுக்கு முன்பு ஏதேனும் குடும்ப பிரச்சினை அல்லது மனஅழுத்தம் இருந்ததா? என்பதையும் ஆராய்ந்து வருகின்றனர். 5 மாத குழந்தையுடன் இளம் தாய் உயிரிழந்த இந்த துயர சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

