தீபாவளி பண்டிகை; தமிழகம் முழுவதும் தயார் நிலையில் 1,353 ஆம்புலன்ஸ்கள்!
தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால், அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்காக மாநிலம் முழுவதும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Published : October 18, 2025 at 8:54 PM IST
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 1,353 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் அக்டோபர் 20 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதற்காக புத்தாடை, இனிப்பு பட்டாசு மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் நேரக்கட்டுப்பாட்டை தமிழக அரசு விதித்துள்ளது.
அந்த வகையில், தமிழ்நாட்டிலும் காலை 6 முதல் 7 மணி வரை மற்றும் மாலை 7 முதல் 8 மணி வரையிலான நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை செய்து வந்தாலும், எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துள்ளது.
அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் 1,353 அவசரக்கால 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கிராமப்புற பகுதிகளில் 7 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் சென்றடையும் என்ற நிலை ஏற்கனவே 5 நிமிடங்களாக மாற்றப்பட்டுள்ளது. இருந்தாலும், தீபாவளி என்பதால் கூடுதல் பணியாளர்கள் கூடுதல் ஆம்புலன்ஸ்களை நியமித்து பாதிக்கப்பட்ட இடத்தை 4 நிமிடத்தில் அடைவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
| இதையும் படிங்க: ரயிலில் தொலைந்த வாட்ச்: ‘கடமையை செய்; பலனை எதிர்பார்’ என அனுபவத்தை பகிர்ந்த சென்னை மருத்துவர்! |
தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் என்று அதிகளவில் போக்குவரத்து நெரிசல் இருக்கக்கூடிய பகுதிகளில் நாளை முதல் 120 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட உள்ளது. மேலும், அனைத்து 108 ஆம்புலன்ஸ்களிலும் தீக்காயத்திற்கான சிறப்பு சிகிச்சை பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, அக்.19 மற்றும் அக்.20 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருப்பதை மாவட்ட மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குநர் சோமசுந்தரம் அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

