மனிதத்தை வாழ வைக்கும் அரசு மருத்துவர்கள்; சென்னையில் சத்தமின்றி செயல்படும் மறுவாழ்வு மையம்
ராஜீவ்காந்தி மருத்துவமனை மறுவாழ்வு மையத்தில், இதுவரை 781 பேர் பலனடைந்துள்ளனர்.

Published : February 23, 2026 at 9:47 PM IST
- By எஸ்.ரவிச்சந்திரன்
சென்னை: ராஜீவ்காந்தி மருத்துவமனையில், கவனிக்கக்கூட ஆளில்லாத நோயாளிகளுக்கு ‘மறுவாழ்வு மையம்’ என தனியாக வார்டு அமைத்து, அரவணைப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வாழ்க்கையில் உறவுகள் என்பதே, முடியாத காலத்தில் துணையாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் என்றாலும், சில சந்தர்ப்பங்களில் பெற்ற மகனும், மகளும் கூட கவனிக்காமல் அவதிப்படும் சூழலை பார்க்க முடிகிறது என்பது நிதர்சனம். தனிமை சுகமானது என்று சிலர் கூறினாலும், உடல்நிலை சரியில்லாத போது உதவக்கூட ஆள் இல்லாமல் இருப்பது தான் மிகப்பெரிய வேதனை. அதை மனதளவில் அனுபவித்தால் மட்டுமே புரியும்.
அது, உலகையே உலுக்கிய கரோனா பெருந்தொற்று காலத்தில் பாதிக்கப்பட்டு மனைவி, மகன், மகள், பேரக்குழந்தைகள் என குடும்பத்தை பிரிந்து தவித்த நோயாளிகளுக்கு நன்றாக புரியும். என்னதான், தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பு சிறப்பாக இருந்தாலும், அரசு மருத்துவமனைகளில் நோயாளியை கவனிக்க நிச்சயம் ஒருவர் இருக்க வேண்டும். ஆனால் ஆதரவு இல்லாதவர்களுக்கு யார் இருக்கிறார்கள்?
இதுபோன்ற சூழலில்தான், ஆதரவு சிகிச்சை தேவைப்படும் நோயாளிக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ‘மறுவாழ்வு பகுதி’ என தனியாக ஒரு மையமே அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ பயனாளியை பார்த்துக் கொள்ள யாரும் இல்லாவிட்டாலும், அவர்களுக்கும் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. தற்போது வரை, விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோய் பாதிப்புக்கு பிறகு கைவிடப்பட்டவர்கள், வெளிமாநிலங்களில் இருந்து பிழைப்பிற்காக வந்தவர்களுக்கு விபத்து ஏற்பட்டு கவனிக்க ஆளில்லாதவர்கள் என இதுவரை 781 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
தற்போது 13 ஆண்கள், 5 பெண்கள் இந்த மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பழையை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள முடநீக்கியல் பிரிவின் பின்புறம் இந்த மையம் சத்தமின்றி செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து மறுவாழ்வு பகுதியின் பொறுப்பு மருத்துவரும், நீரிழிவு நோய் நிபுணர் மற்றும் ஜெரியாட்ரிக் மருத்துவரும், உதவி பேராசிரியரான பிரியா மாலினி ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “இந்த மறுவாழ்வு மையத்தில் யாருமே இல்லாத நபர்கள், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், உடல்நிலை சரியில்லாமல் சாலையில் இருக்கும் நோயாளிகள் போன்றவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுவார்கள். அங்கு 60 சதவீதம் குணமடைந்த பிறகு, இந்த வார்டிற்கு மாற்றப்படுவார்கள்.
அப்படி வரும் நாேயாளிகளை பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கான சிகிச்சை அளித்தல், சாப்பாடு கொடுத்தல், நடக்க வைத்தல், நினைவு இல்லாமல் வரும் நோயாளிகளுக்கு நினைவு வர வைப்பது போன்ற சேவைகள் செய்து வருகிறோம். ஒருவேளை நோயாளிக்கு நினைவுகள் வந்தால், அவர்களது உறவினர்களை கண்டுபிடித்து அவர்களுடன் அனுப்பி வைக்க தேவையான வேலைகளை செய்வோம். நோயாளிகள் அவர்களது ஊர்ப் பெயர், தெரு பெயர் என எதாவது ஒரு அடையாளத்தை கூறினாலும், காவல்துறையின் உதவியுடன் கண்டுபிடித்து விருப்பப்பட்டால் உறவினருடன் அனுப்பி வைப்போம். இதற்காக, ஒரு குழுவே செயல்படுகிறது.
இதுவரை 781 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். மறுவாழ்வு மையம் என்பதால், நோயாளிகள் குறைந்தது 2 மாதம் முதல் 2 வருடம் வரையிலும் கூட இருப்பார்கள். தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, பிகார், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களிலிருந்து சிகிச்சைக்காக இங்கு வந்துள்ளனர். குணமடைந்த பின்னர் அவர்களின் ஊருக்கு அனுப்பி வைத்துள்ளோம். குறிப்பாக, வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள் என 140 நோயாளிகளை உறவினர்களுடன் அனுப்பி வைத்துள்ளோம்.
நேபாளத்தை சேர்ந்த ஒரு நோயாளியை கூட, அவர்களது உறவினர்கள் வந்து அழைத்து சென்றனர். ஒருவேளை யாருமே இல்லை என்றால், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். அதில் சிலர் குணமடைந்து, சுயமாக கவனித்துக் கொள்கிறோம், தங்குவதற்கு இடமிருந்தால் மட்டும் போதும் என்பார்கள். அவர்களை சென்னை பெருநகர மாநகராட்சியால் நிர்வகிக்கப்படும் மையங்களுக்கு அனுப்பி வைப்போம்” என்றார்.
மேலும் பேசிய அவர், “இங்கு நியமனம் செய்யப்படும் பணியாளர்கள், நோயாளிகளுக்கு தேவையான உணவு அளிப்பதுடன், உடைகளை சுத்தம் செய்வது, குளிக்க வைப்பது போன்ற பணிகளையும் செய்வார்கள். அதற்காக, அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும். நோயாளிகள் குணமடைந்தவுடன் உறவினர்களுடன் சேர்க்க வேண்டும் என்பதே, இந்த மறுவாழ்வு மையத்தின் நோக்கம்.
| இதையும் படிங்க: "கல்வி தான் கடவுள் - அது தேவையான அனைத்தையும் கொடுக்கும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு |
அதேபோல விபத்தில் காலை இழந்தவர்களுக்கு செயற்கை கால் பொருத்தி, இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வருகிறோம். கண் பார்வை இழந்த நோயாளிக்கு, அறுவை சிகிச்சை முதல் அனைத்து நேரங்களிலும் ஒருவர் கூடவே இருந்து குணமடைய வைத்துள்ளோம். இங்குள்ள நோயாளிகளுக்கு தேவையான உணவு மருத்துவமனை உணவகத்திலிருந்து வாங்கிக் கொடுப்பது முதல் சில நோயாளிகளுக்கு பணியாளர்களே ஊட்டியும் விடுவார்கள். இங்குள்ள நோயாளிகள் இறக்க நேரிட்டால், மருத்துவமனை சட்டத்தின்படி உடல் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படும்” என்றார் மருத்துவர் பிரியா மாலினி.
தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆண் நோயாளி ஒருவரிடம் விசாரித்தபோது, “எனது மனைவி இறந்து 20 வருடம் ஆகிறது. தாய், தந்தையும் இறந்துவிட்டனர். என்னுடைய மகள் வெளிநாட்டில் இருக்கிறார். அவருடன் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. இதுபோன்ற சூழலில், கால் முறிவு ஏற்பட்டு இங்கு வந்த என்னை இவர்கள் நன்றாகப் பார்த்து கொள்கிறார்கள்” என்றார்.

