ETV Bharat / state

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூல் - ஒரே நாளில் 67 ஊழியர்கள் சஸ்பெண்ட்

சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இயங்கிவரும் டாஸ்மாக் விற்பனை நிலையங்கள் மீது எழுந்த தொடர்ச்சியாக புகார்களின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 3, 2026 at 7:37 AM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்த 67 ஊழியர்களை ஒரே நாளில் பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் ஊழியர்களின் நலன் சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, பணியாளர்களுக்கு உரிய ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்ட பிறகு, அதிக கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட தவறுகள் நடந்தால் அதை அரசு ஏற்றுக்கொள்ளாது எனவும், விதிமீறலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், பணியாளர்களை அரவணைத்துச் செல்ல இந்த அரசு தயாராக உள்ளது. அதே போல், மக்களின் பணத்தையும், நம்பிக்கையையும் பாதுகாப்பது அரசின் கடமை. நுகர்வோரின் பணம் ஒரு ரூபாயாக இருந்தாலும் அதை பாதுகாக்க வேண்டும். எனவே ஒரு ரூபாய் கூட கூடுதலாக வைத்து மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாட்டிலுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில், மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக பணம் வசூலித்த 67 ஊழியர்களை ஒரே நாளில் டாஸ்மாக் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இயங்கிவரும் டாஸ்மாக் விற்பனை நிலையங்களில், மதுபாட்டில்களுக்கு அதன் விற்பனை விலையை விட கூடுதலாக பணம் பெறப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில் தீவிர விசாரணை மற்றும் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, விதிமீறலில் ஈடுபட்ட 67 விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: டாஸ்மாக் நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவு

அமைச்சரின் கடும் எச்சரிக்கைக்குப் பிறகும், சில கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் போக்கு தொடர்ந்ததால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களிலும் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் எந்தவித பாரபட்சமும் இன்றி கடும் நடவடிக்கை தொடரும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, டாஸ்மாக் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவுகளை மீறும் ஊழியர்கள் மீது புகார் அளிக்கப்பட்டால் உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.