செம்மொழி பூங்காவில் ஒரே நாளில் 27,452 பேர் விசிட்... குடும்பம் குடும்பமாக குவிந்த கோவை மக்கள்
பூங்கா வளாகத்தில் தரைத்தள வாகன நிறுத்துமிடத்தில் மொத்தம் 450 கார்கள், 10 பேருந்துகள் மற்றும் 1,000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு வாகன நிறுத்துமிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Published : December 15, 2025 at 9:26 PM IST
கோயம்புத்தூர்: செம்மொழி பூங்கா திறக்கப்பட்ட பின் முதல் ஞாயிற்றுகிழமையான நேற்று ஒரேநாளில் 27,452 பேர் பார்வையிட்டுள்ளனர்.
கோவையில் கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், அன்றைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி, செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார். ஆனால், அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனையடுத்து, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர், செம்மொழி பூங்கா அமைப்பதற்கான பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
அதன்படி, கோவை மாநகராட்சி சார்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், 45 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா அமைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
45 ஏக்கரில், ரூ. 208.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவில் செம்மொழி வனம், மகரந்த வனம், மூலிகை வனம், நீர் வனம், நட்சத்திர வனம், நலம் தரும் வனம், நறுமண வனம் உள்ளிட்ட 23 விதமான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் செடி, கொடி, மரம் போன்ற 5 லட்சத்திற்கும் அதிமான தாவரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, இந்த செம்மொழி பூங்காவில் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள மரங்கள் மற்றும் செடிகள் நடப்பட்டுள்ளன. மேலும், பூங்கா வளாகத்தில் உள்ள மரங்கள், தாவரங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய பெயர் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. அதோடு, பெயர் பலகைகளில் க்யூஆர் குறியீடு (QR code) மூலம் அந்த தாவரங்கள் குறித்த முழு விபரங்களையும் அறிந்து கொள்ளும் வகையில் தொழில்நுட்ப வசதியும் செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு
மேலும், செம்மொழிப் பூங்கா, 500 பேர் அமரக்கூடிய வகையில் திறந்தவெளி அரங்கம், கடையெழு வள்ளல்களின் சிற்பங்கள், இயற்கை அருங்காட்சியகம், திறந்த வெளி அரங்கம், உயர்தர உடற்பயிற்சி கருவிகளுடன் திறந்தவெளி உடற்பயிற்சி மையம், இயற்கை உணவகம், பூங்காவில் பணியாற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கென தனி அறை, உணவகம், ஒப்பனை அறை, சில்லறை விற்பனை நிலையம், செயற்கை நீர் வீழ்ச்சியுடன் கூடிய நுழைவு வாயில் போன்ற முக்கியமான அம்சங்களை கொண்டுள்ளது.
தொடர்ந்து, இந்த பூங்கா வளாகத்தில் மக்கள் எளிதாக நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு ஏதுவாக இயற்கை முறையில் 2.2. கி.மீ. தூரத்திற்கு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. பூங்கா வளாகத்தினுள் 4,000 சதுர அடி பரப்பளவில் உள்வன மாதிரி காட்சியமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் விளையாடுவதற்கு என 14,000 சதுர அடி பரப்பளவில் விளையாட்டுத்திடல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கும் விளையாட்டுத்திடல் அமைக்கப்பட்டுள்ளது.
பூங்கா வளாகத்தில் தரைத்தள வாகன நிறுத்துமிடத்தில் மொத்தம் 450 கார்கள், 10 பேருந்துகள் மற்றும் 1,000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு வாகன நிறுத்துமிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பூங்கா வளாகத்தினுள் ஜெர்மன் தொழிநுட்பத்தில் மழைநீர் சேகரிப்பு வடிகால் அமைப்பு 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
மகளிர் சுயஉதவி குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு வசதியாக மதி அங்காடி நிறுவப்பட்டுள்ளது. முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏதுவாக இருக்கும் வகையில் சக்கர நாற்காலிகள், மின்சாரத்தில் இயங்கும் பேட்டரி வண்டிகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் புகைப்படம் எடுத்து மகிழ, பல்வேறு இடங்களில் செல்பி பாயிண்ட்கள் வைக்கப்பட்டுள்ளன.
45 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா முதல்கட்டமாக வடிவமைக்கபட்டது. மொத்தம் 165 ஏக்கரில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்ட நிலையில், முதல்கட்ட பணிகள் நிறைவடைத்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைதொடர்ந்து கடந்த 11ம் தேதி முதல் பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பூங்கா திறக்கபட்ட பின் முதல் ஞாயிற்று கிழமையான நேற்று (டிச.14) ஏராளமான பொதுமக்கள் செம்மொழி பூங்காவை பார்வையிட குவிந்தனர்.
நேற்று ஒரு நாள் மட்டும் 27,452 பேர் செம்மொழி பூங்காவை பார்வையிட்டு மகிழ்ந்தனர். டிக்கெட் எடுக்க கியூஆர் கோடும் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், கவுண்ட்டரில் நிற்காமல் கியூஆர் குறியீட்டை பயன்படுத்தியும் பொதுமக்கள் டிக்கெட் எடுத்து கொண்டு பூங்காவிற்குள் சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர்.

