காமராஜருக்கு மெரினாவில் இடம் மறுக்கப்பட்டதா? - காங்கிரஸ் எம்எல்ஏ குற்றச்சாட்டுக்கு தங்கம் தென்னரசு பதில்
காமராஜர் இறந்த போது, மெரினாவில் நினைவிடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்படவில்லை என்று சட்டப்பேரவையில் ஏற்கனவே பதிவாகி உள்ளதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்தார்.

Published : September 1, 2026 at 3:20 PM IST
சென்னை: மெரினாவில் காமராஜருக்கு நினைவிடம் அமைக்க அனுமதி கொடுக்கவில்லை என்ற காங்.எம்.எல்.ஏ குற்றச்சாட்டுக்கு சட்டப்பேரவையில் முன்னாள் திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்தார்.
தவெக ஆட்சியின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது. 2026-27ஆம் நிதியாண்டுக்கான பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட்கள் முதலில் தாக்கல் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதமும், பதிலுரையும் இடம்பெற்றது. பின்னர் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக தனித் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி மீண்டும் சட்டப்பேரவை கூடிய நிலையில், பல்வேறு துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களும், கவன ஈர்ப்பு தீர்மானங்களும் இடம்பெற்று வருகின்றன. அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 11ஆம் நாளான இன்று கைத்தறி, தொழிலாளர் நலன்,குறு சிறு நடுத்தர தொழில் ஆகிய துறைகளின் மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றன.
இதனிடையே சட்டப்பேரவையில் நேற்று பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் தாரகை கத்பட், காமராஜருக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க திமுக இடம் கொடுக்கவில்லை என்றார்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ குற்றச்சாட்டுக்கு திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பேரவையில் விளக்கமளித்தார்.
பேரவையில் பேசிய தங்கம் தென்னரசு, “நேற்று அவையில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பட் மெரினா கடற்கரை பகுதியில் காமராஜர் நினைவிடம் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டது என்று கூறினார். பிழையான செய்தி பேரவையில் பதிவாக கூடாது. காமராஜர் மரணம் அடைந்த செய்தி கேட்டதும், அன்றைய முதலமைச்சர் கருணாநிதி மரியாதை செலுத்தினார்.
காமராஜர் தேசிய தலைவர், உரிய முறையில் மரியாதை செய்வோம் என்று சொன்னார். காந்தியடிகள் நினைவு மண்டபம் அருகில் நினைவிடம் அமைத்து மரியாதை செய்ய வேண்டும் என்று காங்கிரஸார் கூறினார்கள். அதனை ஏற்று அங்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. ஆனால், மெரினாவில் நினைவிடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்படவில்லை. இது தொடர்பான கருத்து பேரவையில் ஏற்கனவே பதிவாகி உள்ளது” என்றார்.
தொடர்ந்து அன்றைய மேலவை காங்கிரஸ் உறுப்பினர் ராஜாராம் ஐயர், காமராஜர் மரணம் தொடர்பாகவும், அவரை நல்லடக்கம் செய்ய திமுக அரசு எவ்வளவு உறுதுணையாக இருந்தது என்றும் ஏற்கனவே அவர் சட்ட மேலவையில் பேசிய பேச்சுக்களை தங்கம் தென்னரசு மீண்டும் வாசித்து காட்டினார்.

