மகளிர் நலனுக்காக ரூ.40 கோடி செலவில் நடமாடும் மருத்துவ ஊர்தி - தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
இந்த நடமாடும் ஊர்தியில் ரூ.1.10 கோடி செலவில் டிஜிட்டல் மெமோகிராபி, ECG கருவி, செமி-ஆட்டோ அனலைசர் (Semi-autoanalyser) உள்ளிட்ட பல வசதிகள் இடம்பெற்றுள்ளன.

Published : November 13, 2025 at 8:18 PM IST
சென்னை: பெண்களுக்கான புற்றுநோயை கண்டறியும் ‘நடமாடும் மருத்துவ ஊர்தி திட்டம்’ 2026 ஜனவரி மாதம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் கிடைத்திட வேண்டும் என்ற நோக்கில் புதிய அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டுதல், மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், நவீன மருத்துவக் கருவிகளை நிறுவுதல் உள்ளிட்ட செயல்களில் அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக ஏழை, எளிய மக்கள் நல்வாழ்வு பெறவேண்டும் என அவர்களின் இல்லங்களுக்கே சென்று மருத்துவ சிகிச்சை அளித்திடும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’, சாலை விபத்துக்களில் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் ‘இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48’, சிறப்பு மருத்துவ சேவைகளை மக்களிடம் கொண்டு செல்லும் ‘நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்கள்’ போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ், மகளிர் நல்வாழ்விற்காக 38 நடமாடும் மருத்துவ ஊர்தி ரூ.40 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம், 3 முக்கிய புற்றுநோய்களான கருப்பைவாய், மார்பக மற்றும் வாய் புற்றுநோய்களுக்கான பரிசோதனை மற்றும் பிற முக்கிய நோய்களான பரிசோதனைகளை பெண்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த வாகனமானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 37 வாகனங்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், இந்த நடமாடும் மருத்துவ ஊர்தி வாகனத்தை இன்று (நவ.13) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து அவரது எக்ஸ் தளத்தில், “மகளிர் நலமே சமூக நலம்.. இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்களுக்கான புற்றுநோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை, இதய நோய்கள் பரிசோதனை செய்யத் தொடங்கி வைத்துள்ள, மகளிர் நலவாழ்விற்கான நடமாடும் மருத்துவ சேவைத் திட்டத்தைப் பெண்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
காஞ்சியில் தொடங்கும் இத்திட்டம், மகளிரிடம் இருந்து பெறப்படும் ஆலோசனைகளுடன் அனைத்து மாவட்டங்களுக்கும் வரும் ஜனவரி மாதம் விரிவுபடுத்தப்படும். மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய்ப் புற்றுநோய் முதலியவற்றைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து நம் பெண்களின் நலனைக் காக்கும் இத்திட்டத்தை இந்தியா மொத்தமும் பின்பற்றத்தக்க வகையில் செயல்படுத்திக் காட்டுவோம்” என பதிவிட்டுள்ளார்.
மகளிர் நலமே சமூக நலம்!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) November 13, 2025
இந்தியாவிலேயே முதல்முறையாகப் பெண்களுக்கான புற்றுநோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை, இதய நோய்கள் பரிசோதனை செய்யத் தொடங்கி வைத்துள்ள, மகளிர் நலவாழ்விற்கான நடமாடும் மருத்துவ சேவைத் திட்டத்தைப் பெண்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.… pic.twitter.com/SYSKkzqeHm
இந்த மருத்துவ வாகனம் குறித்து பிரத்யேக பேட்டி அளித்த சுகாதாரத் துறை அதிகாரி ஜெயஸ்ரீ, "இந்த வாகனத்தில் கருப்பைவாய், மார்பகம் மற்றும் வாய்ப்புற்று நோய்க்கான பரிசோதனைகளை செய்ய முடியும். மேலும் இதில் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தசோகை, இருதய நோய்களுக்கான பரிசோதனைகள் என 7 வகையான நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியும் வசதிகளும் உள்ளன.
அதுமட்டுமின்றி பெருங்குடல், நுரையீரல் மற்றும் கருப்பை புற்றுநோய்க்கான சாத்தியகூறுகளையும் கண்டறிய முடியும். இந்த மருத்துவ ஊர்தி முதற்கட்டமாக காஞ்சிபுரத்தில் ஒரு மாதம் சோதனை திட்டமாக செயல்பட உள்ளது. அதனையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

