ரூ.249 கோடி செலவில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரம் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்த கட்டடம் வாகன நிறுத்த வசதிகள், 250 மற்றும் 50 இருக்கை வசதிகளைக் கொண்ட கூட்டரங்கங்கள், உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடம், குழந்தைகள் பராமரிப்பு மையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.

Published : March 2, 2026 at 4:24 PM IST
சென்னை: ரூ.249 கோடி செலவில் 5.56 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான வணிக அலுவலக கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
உலகம் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், நிதிநுட்ப துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நிதிநுட்ப துறையில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17.06.2023 அன்று சென்னை நந்தம்பாக்கத்தில் 56 ஏக்கர் பரப்பளவில், நிதிநுட்ப நகரம் (FinTech City) அமைப்பதற்கும், அதில் முதற்கட்டமாக 5.56 லட்சம் சதுர அடி கட்டட பரப்பளவில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரம் (FinTech Tower) என்ற அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிதிநுட்ப கோபுரக் கட்டடம் ரூ.249 கோடி செலவில் இரண்டு அடித்தளங்கள், தரை மற்றும் 11 தளங்களுடன் 5.56 லட்சம் சதுர அடி பரப்பளவில், அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
நிதி மற்றும் நிதிநுட்ப நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை தொடங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் உள்ள உயர் தர அலுவலக இடங்கள் நிதிநுட்ப கோபுரத்தில் (Fintech Tower) அமைக்கப்பட்டுள்ளன. LEED Platinum Green Building தரத்துடன் உருவாக்கப்பட்ட இக்கட்டடம் வாகன நிறுத்த வசதிகள், 250 மற்றும் 50 இருக்கை வசதிகளைக் கொண்ட கூட்டரங்கங்கள், உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடம், குழந்தைகள் பராமரிப்பு மையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.

| இதையும் படிங்க: “அதிமுக - என்டிஏ கூட்டணியில் யாருக்கு யார் தலைமை என்பதே தெரியாமல் உள்ளார்கள்” - விளாசிய மு.க.ஸ்டாலின் |
தடையற்ற வணிக சூழலை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, உலகத் தரத்திலான உள்கட்டமைப்புடன் உருவாக்கப்பட்ட இக்கட்டடம், தமிழ்நாட்டின் நிதிநுட்ப வளர்ச்சிக்கான முக்கிய மையமாக திகழும். இந்நிகழ்ச்சியின் போது, M/s. Prime Forex Pvt. Ltd., M/s. Simptra Technologies Pvt. Ltd., மற்றும் M/s. MidFin Wealth Pvt. Ltd. ஆகிய நிறுவனங்களுக்கு நிதிநுட்ப கோபுரத்தில் அலுவலக இடங்கள் ஒதுக்கீட்டிற்கான ஆணைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்வில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், டிட்கோ தலைவர் சந்தியா வேணுகோபால் சர்மா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் அருண் ராய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

