வாக்கு எண்ணிக்கை நாளில் கூடுதல் கவனம் தேவை; திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
வாக்கு எண்ணிக்கையின்போது எந்தவித குளறுபடியும் நடந்துவிடக்கூடாது என்றும் நமது பார்வையிலிருந்து எந்த விஷயமும் தவறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் திமுக நிர்வாகிகளுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Published : April 30, 2026 at 4:41 PM IST
சென்னை: வாக்கு எண்ணிக்கை முடியும் வரை கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப். 23 ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக, தமிழ்நாடு முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் செலுத்திய வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழ்நாடே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், திமுக மூத்த நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது, திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள் குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள், மாவட்ட செயலாளருடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிடும் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடையும் வரை கூடுதல் கவனம் செலுத்தி, உன்னிப்பாக கவனிக்க வேண்டும் எனவும் திமுக நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல, எந்தவித குளறுபடியும் நடந்து விடக்கூடாது, நமது பார்வையிலிருந்து எந்த விசயமும் தவறாமல் பார்வையிட வேண்டும் எனவும் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் பலர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எ.வ. வேலு, கே.ஆர். பெரியகருப்பன், சு.முத்துசாமி, சி.வீ. மெய்யநாதன், சி.வி. கணேசன், செந்தில் பாலாஜி, அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி திமுக துணை அமைப்புச் செயலாளர் எஸ். ஆஸ்டின், டி.ஜெ. கோவிந்தராஜன், சபா. இராஜேந்திரன், நாமக்கல் இராணி, காதர்பாட்சா முத்துராமலிங்கம், கே.எஸ். மூர்த்தி, ரெ. மகேஷ், ஆ. தமிழரசி, எஸ்.ஏ. சத்யா, மு.மணிகண்டன், புதுச்சேரி ஆர். சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் பூச்சிமுருகன் ஆகியோர் உடனிருந்தார்.

