மாதா சிலையிலிருந்து 'திடீரென' வடிந்த எண்ணெய் - வழிபாடு செய்ய கிராம மக்கள் குவிந்ததால் பரபரப்பு
சிலையிலிருந்து எண்ணெய் வடிவதை கேள்விப்பட்ட சுற்றுப்புற கிராமத்தினர் மாதாவை வழிபட்டு எண்ணெய்யை குப்பிகளில் எடுத்துச் சென்றனர்.

Published : January 7, 2026 at 3:03 PM IST
மதுரை: புல்லூத்து பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குழந்தை ஏசுவுடன் இருக்கும் மாதா சிலையிலிருந்து திடீரென எண்ணெய் வடிந்ததை கண்ட பொதுமக்கள் மாதாவை வழிபட கூடியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் துவரிமான் அருகே நாகமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது புல்லூத்து கிராமம். இதனருகே 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாய்ஸ் டவுன் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இங்கு தென் மாவட்டங்களைச் சேர்ந்த வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மாணவர்களுக்கான புனித தெலசால் தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. உண்டு உறைவிட மையம் என்பதால் இங்கு 35 மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர்.
பாய்ஸ் டவுன் அமைப்பின் 60-ம் ஆண்டை முன்னிட்டு, அதற்கு செல்லும் பாதையில் புதிய பீடம் ஒன்று நிறுவப்பட்டு, அதில் குழந்தை ஏசுவுடன் இருக்கும் வேளாங்கண்ணி மாதாவின் ஃபைபர் சிலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பீடமானது மதுரை உயர் மறை மாவட்ட ஆயர் அருட்தந்தை அந்தோணிசாமி சவரிமுத்துவால் புனித நீர் தெளிக்கப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.
ஆனால் அந்த குறிப்பிட்ட பீடத்தில் கூடுதல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டி இருந்ததால் சிலையானது தற்காலிகமாக பீடத்தின் அருகே உள்ள காவலாளி அறைக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று (ஜன 6) இரவு திடீரென இந்த மாதாவின் சிலையிலிருந்து எண்ணெய் போன்ற திரவம் வடியத் தொடங்கியது. இது குறித்து காவலாளி அளித்த தகவலின் அடிப்படையில் பாய்ஸ் டவுன் நிர்வாகத்திலுள்ள அருட்சகோதரர்கள் வந்து பார்வையிட்டனர்.
| இதையும் படிங்க: அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது; திமுகவை அகற்றுவதே லட்சியம் என இபிஎஸ் - அன்புமணி பேட்டி |
இது குறித்து அதன் நிர்வாக இயக்குநர் இனிகோ அமலன் கூறுகையில், “இந்த அறையில் தங்கும் காவலாளி நேற்று இரவு 11.30 மணியளவில் மாதா சிலையிலிருந்து நறுமணத்துடன் எண்ணெய் வடிவதாக தகவல் தெரிவித்தார். மேலும் இந்த சிலையை உபயமாக அளித்த ஸ்டீபன் என்பவர் இன்று காலை பரமாரிப்பு பணிகளை மேற்கொள்ள வந்த போது, சிலையிலிருந்து அதிகமாக எண்ணெய் வடிவதை கண்டு எங்களிடம் தெரிவித்தார்.
உடனடியாக நாங்கள் இங்கு வந்து பார்த்தோம். அதற்குள் இது குறித்து கேள்விப்பட்ட புல்லூத்து, நிர்மலாபட்டி, கீழமாத்தூர் மற்றும் துவரிமான் போன்ற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இங்கு வந்து மாதாவை வழிபட்டு, வடியும் எண்ணெயை தங்கள் நெற்றிகளில் இட்டுக்கொள்வதுடன், சிறு குப்பிகளிலும் எடுத்துச் செல்கின்றனர்” என்றார்.

