ETV Bharat / state

கோத்ரா கலவரத்தில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக திமுகவினர் ராஜினாமா செய்திருக்கலாமே? அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அவையில் ஆவேசம்

திமுக ஆட்சியில் காலனி என்ற பெயர் ஒழிக்கப்பட்டது, ஆனால் காலனி ஒழிக்கப்பட்டதா? விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தலித் மக்கள் காலனிகளில், சாதாரண குடிசைகளில் தான் இன்றும் வாழ்கிறார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா (Tamilnadu Assembly (Youtube Channel))
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 27, 2026 at 5:39 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: கோத்ரா கலவரத்தில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக திமுகவினர் அனைவரும் ராஜினாமா செய்திருக்க வேண்டியது தானே? என சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசமாக பேசினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில், வாசுதேவநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா, மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசும்போது, முதல்வர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக காட்சிகள் சித்தரிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நாங்கள் தான், தலித் சகோதரர்களுக்கு அனைத்தையும் செய்தோம் என திமுக உறுப்பினர் ராஜா கூறுகிறார். ஒரு திரைப்படத்தின் கதை என்பது ஒவ்வொருவரின் பார்வையில் உள்ளது. இதே அவையில் முன்னாள் முதல்வர் கலைஞர், ஆர்.எஸ்.எஸ் ஒரு சமூக இயக்கம் என தெரிவித்துள்ளார்.

குறைகளை சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் 50 ஆண்டு கால வரலாற்றை எடுப்போம். 1999இல் கோத்ரா கலவரத்தில் திமுக என்ன நிலைப்பாடு எடுத்தது? அப்போது இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக அனைவரும் ராஜினாமா செய்திருக்க வேண்டியது தானே? 1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரை பாஜகவின் ஆட்சியை கொண்டு வந்தது திமுக தான். இந்த பாவத்தையும் வரலாற்றையும் எப்போதும் மறக்க முடியாது.

தலித் மக்களுக்கு எதிராக குற்றம் சம்பவங்கள் நடந்தது திமுக ஆட்சியில்தான் என்று தகவல் சொல்கிறது. நிதி ஒதுக்கீடு செய்துவிட்டு எந்த ஒரு திட்டமும் தலித் மக்களுக்கு கொண்டு செல்லவில்லை என சி.ஐ.ஜி ரிப்போர்ட் கூறுகிறது. திமுக ஆட்சியில் காலனி என்ற பெயர் ஒழிக்கப்பட்டது, ஆனால் காலனி ஒழிக்கப்பட்டதா? இன்றும் விழுப்புரம் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தலித் மக்கள் காலனிகளில், சாதாரண குடிசைகளில் தான் வாழ்கிறார்கள்.

இதையும் படிங்க: தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு புதிய கட்டடம், இஸ்லாமிய மாணவிகளுக்கு உதவித்தொகை - சட்டப்பேரவையில் அமைச்சர் ஷாஜகான் அறிவிப்பு

தலித் பெண்களுக்கான முக்கியத்துவம் கடந்த 75 ஆண்டுகளாக கொடுக்கப்படவில்லை என அமைச்சர் கூறிய நிலையில், பேரவையில் திமுகவினருக்கும் தவெகவினருக்கும் இடையே பெரும் அமளி ஏற்பட்டது. நாங்கள் யாரையும் மிரட்டவில்லை, எங்களை மிரட்டினாலும் நாங்கள் பயப்படுபவர்கள் கிடையாது. சென்னையில் 60% சேரிகளாக தான் (SLUMS) இருக்கின்றன. தமிழ்நாடு முழுவதும் 30% தலித் மக்கள் சேரியில் தான் வாழ்கிறார்கள் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த கே.என் நேரு பேசுகையில், "எந்த எந்த அரசாங்கமும் எந்த துறைக்கும் நிதி ஒதுக்கும்போது சில இடங்களில் நீதிமன்றங்களின் வாயிலாக திட்டத்தை செயல்படுத்த முடியாதபடி தடை வரும். இதனால் அத்திட்டத்திற்கு செலவு செய்யப்படும் தொகை முடங்கிவிடும்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை உருவாக்கியவரே கலைஞர் தான். தொகை செலவு செய்யாமல் விட்டு விட்டோம் என்று கூறுவது தவறு. நீங்கள் ஆட்சிக்கு வந்து மூணு மாதம்தான் ஆகிறது. நாளைக்கு ஓராண்டு காலம் ஆட்சியில் இருந்தால், உங்களுடைய ஆட்சியை மத்திய அரசாங்கம் நிர்ணயம் செய்யும். நாங்கள் ஆதி திராவிட மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று சொல்வது தவறு" என்றார்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நிகழ்ந்தபோது, மத்திய பாஜக அரசில் திமுக அங்கம் வகித்தது. அப்போதைய மத்திய அமைச்சரவையிலும் திமுக எம்.பி.க்கள் இடம்பெற்றிருந்தனர். இதனை மறைமுகமாக குறிப்பிடடே திமுகவினர் ராஜினாமா செய்திருக்கலாமே? என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.