ETV Bharat / state

ஆவின் செயல்பாடுகள் குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை – அமைச்சர் விஜயலட்சுமி அறிவிப்பு

சட்டப்பேரவையில் அஞ்சலையம்மாள் திருவுருவப் படம் வைக்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் அமைச்சர் விஜயலட்சுமி
சட்டப்பேரவையில் அமைச்சர் விஜயலட்சுமி (SS Tamilnadu Assembly YT)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 2, 2026 at 7:51 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: ஆவின் செயல்பாடுகள் குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (செப்டம்பர் 2) நடைபெற்றது. அதற்கு பதிலுரை அளித்த பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான அஞ்சலையம்மாளின் திருவுருவப் படத்தை சட்டப்பேரவைக்குள் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் திருவள்ளுவர், மகாத்மா காந்தி, அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்ட தலைவர்களின் திருவுருவப் படங்கள் உள்ளன. முன்னாள் முதலமைச்சர்களான ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்டோரின் திருவுருவப் படங்களும் சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நிறைவடைந்து பதிலுரை வழங்கிய அமைச்சர் விஜயலட்சுமி, அஞ்சலையம்மாளின் திருவுருவப் படத்தையும் சட்டப்பேரவைக்குள் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

ஆவின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை

தொடர்ந்து பேசிய அமைச்சர் விஜயலட்சுமி, “முதலமைச்சர் விஜய்யின் சாதனைகளை கர்நாடகா, ஆந்திரா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாடும் வியப்புடன் பார்க்கிறது. பணமா, மக்களா? என்று கேட்டால், மக்கள்தான் என்று கூறும் முதலமைச்சராக விஜய் உள்ளார். எங்கெல்லாம் கொடுங்கோல் ஆட்சி நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் மக்கள் புரட்சி நடந்திருக்கிறது. அதேபோல தமிழ்நாட்டிலும் மக்கள் புரட்சி நடந்தது. அதனை மக்கள் ஒற்றை விரல் புரட்சியாக மாற்றியிருக்கிறார்கள்.

ஆவின் நிறுவனத்தை மேலும் வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலமைச்சர் விஜய்யின் வழிகாட்டுதலின் கீழ் ஆவின் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் வழங்குவதால் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.13 கோடியும், ஆண்டுக்கு சுமார் ரூ.5 ஆயிரம் கோடியும் கிராமப்புற பொருளாதாரத்தில் பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சரின் ஒப்புதலைப் பெற்று விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

மேலும், பால் உற்பத்தியாளர்களுக்கு மின்னணு பணப் பரிவர்த்தனை முறையில், அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் நிதிநிலை பின்னடைவு காரணமாக 2021-ஆம் ஆண்டு முதல் பால் உற்பத்தியாளர்களுக்கான தீவன மானியம் நிறுத்தப்பட்டது.

கடந்த நான்கு ஆண்டுகளாக பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதலும் அதிகரிக்கவில்லை. இந்நிலையில், முதலமைச்சர் விஜய் அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.38-ல் இருந்து ரூ.44-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சுற்றுலா தளங்களில் புதிய ஆவின் பாலகங்கள்

மேலும், ஊட்டியில் உற்பத்தி தொடங்கப்படாமல் உள்ள சீஸ் மற்றும் சாக்லேட் உற்பத்தி நிலையங்களில் உடனடியாக உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் புதிதாக ஆவின் பாலகங்கள் அமைக்கப்படும்.

ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் காலாவதி காலத்தை அதிகரிக்கும் வகையில் பேக்கிங் முறைகள் நவீனப்படுத்தப்படும். வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் ஆவின் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர், மாற்றுத்திறனாளிகள், படித்த வேலையில்லா இளைஞர்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு எளிதான நடைமுறைகளில் புதிய ஆவின் பாலகங்களை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதையும் படிங்க: கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 17 அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் கமலி

தொடர்ந்து, சுற்றுலாத் தலங்களில் புதிதாக ஆவின் பாலகங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பால் பண்ணைகளில் பால் கொள்முதல், விற்பனை மற்றும் உற்பத்தி இழப்பு உள்ளிட்ட விவரங்களை மென்பொருள் உதவியுடன் தினந்தோறும் பதிவேற்றம் செய்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பால் பண்ணைகளில் மின்சாரச் செலவை குறைக்கும் வகையில் சூரிய மின்சாரம் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய மற்றும் சர்வதேச தரச் சான்றிதழ்களை பெறுவதற்கான தரநிலைகள் பால் பண்ணைகளில் உறுதி செய்யப்படும். பொதுமக்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப ஆவின் பால் பொருட்களின் தரம் மற்றும் சுவையை மேம்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.