ETV Bharat / state

தகுதியுள்ள அனைவருக்கும் இலவச பொங்கல் வேட்டி சேலை - அமைச்சர் விஜய் பாலாஜி உறுதி

தகுதியுடைய எந்த குடும்பமும், இத்திட்டத்தில் இருந்து விடுபடாத வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார்.

அமைச்சர் விஜய் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு
அமைச்சர் விஜய் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 4, 2026 at 3:48 PM IST

2 Min Read
Choose ETV Bharat

வேலூர்: ரேஷன் கார்டு அடிப்படையில் தகுதியுள்ள அனைவருக்கும் இலவச வேட்டி சேலை வழங்கப்படும் என அமைச்சர் விஜய் பாலாஜி உறுதியளித்துள்ளார்.

வேலூர் கோட்டையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகம் சுமார் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகள், புதிய விளக்குகள் மற்றும் மேம்பட்ட காட்சி அமைப்புகளுடன் விரிவுபடுத்தப்பட்டது.

23 ஆயிரம் சதுர அடியில் விரிவுபடுத்தப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் விலங்கியல் கூடம், மனித பரிணாமக்கூடம், விஞ்ஞானிகள் கூடம், பேசும் மரம் கூடம், சமண சிற்பக் கூடம், கற்சிற்பக் கூடம், சுடுமண் சிற்பக் கூடம், கல்வெட்டுக் கூடம், அஞ்சல் தலைக் கூடம் உள்ளிட்ட 11 கருப்பொருள் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வரலாறு, அறிவியல் மற்றும் பண்பாட்டு மரபுகளை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வண்ணம், நவீன முறையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அருங்காட்சியகத்தை கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜி இன்று (ஜூலை 4) திறந்து வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களின் நம்பிக்கையை தற்போதைய தவெக அரசு வெறும் அறிவிப்புகளை மட்டும் வெளியிடும் அரசாக இல்லாமல், அவற்றை முழுமையாக செயல்படுத்தி, மாற்றத்தை ஏற்படுத்தும் அரசாக செயல்பட்டு வருகிறது” என்றார்.

பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலை குறித்து பேசிய அவர், “ரேஷன் கார்டு அடிப்படையில், தகுதியுள்ள அனைவருக்கும் இலவச வேட்டி மற்றும் சேலை கிடைப்பது உறுதி செய்யப்படும். அதற்காக, கூட்டுறவுத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து மாநிலம் முழுவதும் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அணுக் கனிம சுரங்க திட்டத்திற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு - அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி ஆட்சியரிடம் மனு

தகுதியுடைய எந்த குடும்பமும், இத்திட்டத்தில் இருந்து விடுபடாத வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். குறிப்பாக, அனைவருக்கும் உரிய நேரத்தில் வேட்டி மற்றும் சேலை வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது” என்றார்.

தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் நீண்டகாலமாக முடிவடையாமல் உள்ள சாலைப் பணிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “பணிகளை விரைந்து முடிக்கவும், சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு அனுமதி நிலுவையில் உள்ள பகுதிகளுக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் அனைத்து சாலைப் பணிகளும் முழுமையாக நிறைவு செய்யப்படும்” என உறுதியளித்தார்.

மேலும், காட்பாடி முதல் ரங்காபுரம் வரையிலான புதிய சாலைக்கு ஆன்மிக பேச்சாளர் கிருபானந்த வாரியார் பெயரை சூட்ட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன் முன்வைத்துள்ள கோரிக்கை குறித்து கேட்டபோது, “அந்த கோரிக்கையை தமிழக முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று பரிசீலனை செய்ய, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார்.