ETV Bharat / state

இது கன்னி உரை அல்ல, வன்னி உரை - சட்டப் பேரவையில் கண் கலங்கிய அமைச்சர் வன்னி அரசு

அமைச்சர் வன்னியரசு பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென எழுந்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், என்னுடைய அரசியல் ஆசான் திருமாவளவன் தான், அவருக்கு நன்றி என கூறினார்.

அமைச்சர் வன்னி அரசு
அமைச்சர் வன்னி அரசு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 28, 2026 at 5:43 PM IST

3 Min Read
Choose ETV Bharat

சென்னை: இது கன்னி உரை அல்ல வன்னி உரை என தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் வன்னி அரசு பேசினார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில், சமூகநீதி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்த துறையின் அமைச்சர் வன்னி அரசு பதிலளித்தார்.

கண் கலங்கிய அமைச்சர் வன்னியரசு

அப்போது பேசிய அவர், "கடந்த 1.2.2008 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா பேசும் போது என்னை கைது செய்ய சொன்னார். என்னை கைது செய்ய வேண்டும் என்கின்ற கோஷங்களை எழுப்பிய இதே சட்ட சபையில் என்னை ஒரு உறுப்பினராக, அமைச்சராக அழகு பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய என்னுடைய ஆசான் திருமாவளவனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திண்டிவனம் பகுதி மக்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சொந்த ஊரில் இருந்து வந்து எனக்காக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு என்னுடைய வெற்றிக்காக பாடுபட்ட திமுக இளைஞரணி தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலினுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதிக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டணி கட்சிகள் அனைவருக்கும் நன்றி" என்று கூறி பேரவையில் கண் கலங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் திமுகவுக்கு தொடர்ந்து நன்றி சொல்லிக் கொண்டே தான் இருக்கிறோம். ஆனால் திமுகவினர் எங்கள் தலைவர் திருமாவளவனுக்கு நன்றி சொன்னதாக தெரியவில்லை. நன்றி இருவருக்கும் பொதுவானது தான், நாங்கள் உங்களை பாராட்டியிருக்கிறோம். நீங்கள் எங்களை பாராட்டியிருக்கறீர்கள். ஆனால் இதுவரை நீங்கள் நன்றி கூறவில்லை" என்று திமுக உறுப்பினர்களை பார்த்துப் பேசினார்.

உதயநிதி ஸ்டாலின்

அப்போது எழுந்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "எங்களது வெற்றியை விட வன்னியரசு பெற்ற வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய அரசியல் ஆசான் திருமாவளவன் என பல முறை நான் கூறியுள்ளேன். எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், திருமாவளவனுக்கும் உள்ளது தேர்தலில் கூட்டணி இல்லை, கொள்கை கூட்டணி. தேர்தலுக்காக கூட்டணி மாறும் கட்சி நாங்கள் கிடையாது. திருமாவளவனுக்கு என்றைக்குமே எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறினார்.

கன்னி உரை அல்ல, வன்னி உரை

தொடர்ந்து பேசிய அமைச்சர் வன்னி அரசு, "இரண்டு பக்கமும் நன்றி சொல்ல வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து. நான் கன்னி உரை என்று சொல்லவில்லை வன்னி உரை என்று சொன்னேன். அன்றைக்கு பேசிய பாமக சட்டமன்ற குழுத் தலைவர் கன்னி உரை வேண்டாம் என்று கூறினார். கன்னி என்பது ஆண் மற்றும் பெண் இருவருக்கும் பொதுவானது என்பது தான் சரி.

இதையும் படிங்க: 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 5.32 லட்சம் மிதிவண்டிகள் - டெண்டர் கோரிய தமிழக அரசு

தவெக அரசை சோபா மாடல் அரசு என்ற விமர்சனம் செய்தார்கள். எங்களுடைய அலுவலகத்திற்கு முதலமைச்சர் வந்த போது சோபா வந்தது என்று சொன்னார்கள். நாங்கள் சாதி ஒழிப்பு களத்தில் செயல்பட்டவர்கள். நீ தான் மந்திரி என்று சொல்லி, தலைவர் திருமாவளவன் உட்கார வைத்தார். நாளைக்கு ஒரு போராட்டம் இருக்கிறது என்று சொன்னால் உடனே எழுந்து செல்பவன் நான். எங்களுக்கு இந்த அமைச்சர் பொறுப்பு பெரிதல்ல, நாங்கள் கடந்து வந்த பாதை அப்படிப்பட்டது. தீக்கரையாக்கப்பட்ட குடிசைகளின் சாம்பலில் இருந்து வந்தவர்கள்" என்றார்.

அமைச்சர் வன்னியரசு பேசிக் கொண்டிருக்கும் போது அவை முன்னவர் செங்கோட்டையன் குறுக்கிட்டு, மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தை தொடங்கினால் நன்றாக இருக்கும் என கூறினார்.

அமைச்சர் வன்னியரசு

தொடர்ந்து பேசிய அமைச்சர் வன்னி அரசு, "எங்களை பார்த்து யாரும் பதவிக்காக போனவர்கள் என்று சொல்ல முடியாது. நாங்கள் சமூகத்திற்காக, சமூகநீதிகளுக்காக, சமத்துவத்திற்காக நிற்கக் கூடியவர்கள்.

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக, முதலமைச்சர் கடந்த 24 ஆம் தேதி அறிவித்ததை தொடர்ந்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக் குழுவினர் 25-08-2026 அன்று முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

பரந்தூர் திட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தங்களுடன் துணை நின்ற பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் போராட்டக் குழுவினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது, ஏகனாபுரம் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனை ஏற்று, ஏகனாபுரத்தில் புதிதாக சமுதாய நலக்கூடம் கட்டித் தரப்படும் என அரசு அறிவித்துள்ளது.

ஆணவக்கொலை மற்றும் சாதிய அச்சுறுத்தல்களால் பாதிக்கப்படும் தம்பதிகள் மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய பாதுகாப்பு இல்லங்கள் அமைக்கப்படும்.

கடந்த 27-03-2018 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில், அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் தம்பதி மற்றும் குடும்பத்தினரை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பின் வழிகாட்டுதலுடனும், சாதிய வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர்களின் ஆலோசனைகளின் அடிப்படையிலும், ஆபத்தில் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு சார்பில் பாதுகாப்பு இல்லங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

சமூக நலத்துறை சார்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு

  • வன்கொடுமையால் பாதிக்கபட்ட மக்களுக்கு கருணை தொகை அதிகரிப்பு
  • பழங்குடியினர் வாழ்வாதார திட்டத்திற்கு 250 கோடி நிதி ஒதுக்கீடு
  • ஏகனாபுரம் மக்களின் கோரிக்கையை ஏற்று ஏகனாபுரம் பகுதியில் புதிதாக சமூக நலக்கூடம் கட்டி தரப்படும்
  • 2016 முதல் வன்கொடுமையால் பாதிக்கபட்ட குடும்பங்களை சேர்ந்த 628 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள்
  • சமூக நீதித்துறை, சிறுபான்மைத் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் துறைகளின் மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றம் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.