ETV Bharat / state

“முதலில் கட்சிக்காரர்களை சந்தியுங்கள்” - விஜயை விமர்சித்த திமுக அமைச்சர்

சென்னையில் எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி, திடீரென மின்சார ரயில்கள் குறைக்கப்பட்டதால் தான் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர் என அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் குற்றம்சாட்டினார்.

அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர்
அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 25, 2026 at 5:30 PM IST

1 Min Read
Choose ETV Bharat

அரியலூர்: முதலில் கட்சிக்காரர்களையும், கட்சி கூட்டத்தில் இறந்தவர்களின் குடும்பத்தையும் நேரில் சந்தியுங்கள். அதன் பிறகு கிராமம் கிராமமாக செல்வதைப் பார்க்கலாம் என்று தவெ தலைவர் விஜயை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் வேலூரில் நடைபெற்றது. அதில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், தவெக ஆட்சி அமைந்து, நான் முதலமைச்சரான பிறகு, ஊர் ஊராக சென்று மக்களை சந்திப்பேன். ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்களிடம் நேரடியாகக் குறைகளை கேட்பேன்” என வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்த நிலையில் செந்துறை வஞ்சனபுரம் மணக்கொடையான் நல்லநாயகபுரம் பகுதியில் நீர் தேக்கு தொட்டி, நியாயவிலைக்கடை ஆகியவற்றை திறந்து வைத்த போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

அப்போது தவெக விஜய் குறித்த கேள்விக்கு, “முதலில் விஜய் கட்சிக்காரர்கள் சந்திக்கட்டும். அவரது கட்சிக் கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் வீட்டுக்கு நேரில் போய் முதலில் சந்திக்கட்டும். அதன்பிறகு, முதலமைச்சராகி கிராமம் கிராமமாகச் செல்லலாம்” என விமர்சித்தார்.

மேலும் பேசிய அவர், “ரயில்வே துறை எந்தவித அறிவிப்பும் இல்லாமல், மின்சார ரயில்களின் சேவையை குறைத்துள்ளது. இதனால், சென்னை மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால், பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை ரத்து செய்வதாக இருந்தால், முன்கூட்டியே மாநகர போக்குவரத்து கழகத்திற்கு தென்னக ரயில்வே துறை தெரிவிக்க வேண்டும்.

இதையும் படிங்க: ஓவர்நைட்டில் அதிரடி முடிவு, மூன்று மணி நேரத்திற்குள் ரூ. 6,700 கோடி உரிமைத்தொகை - அமைச்சர் பிடிஆர் பாராட்டு

இதுகுறித்த முன்னறிவிப்பு செய்யாத காரணத்தால், ரயிலை எதிர்பார்த்து சென்ற மக்கள் அவதிக்குள்ளாகினர். இந்த செய்தி தெரிந்தவுடனே, முதலமைச்சரின் உத்தரவின் பேரில் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தற்போது கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது” என்றார்.

இலவசத் திட்டங்கள் குறித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்து பதிலளித்த அவர், “அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இலவசத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இது எப்படி மக்களை சோம்பேறியாக்கும். பெரு முதலாளிகளுக்கு பல லட்சம் கோடிகளை தள்ளுபடி செய்யும்போது கருத்து கூறாதவர்கள், தற்போது மட்டும் கருத்து கூறுவது ஏற்கத்தக்கதல்ல. அவர்களுக்கு பொதுமக்களின் வாழ்க்கைத்தரம் குறித்து தெரியவில்லை. சமூக நீதி கண்ணோட்டம் இல்லை. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது குறித்து அர்த்தம் தெரியாமல் உள்ளனர்” எனத் தெரிவித்தார்.