ETV Bharat / state

சட்டசபை சண்டை சபையாக மாறுகிறதா? பிரேமலதாவின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்

ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிப்பதற்கு தற்போது எந்த சாத்தியக்கூறுகளும் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு
அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 29, 2026 at 4:03 PM IST

1 Min Read
Choose ETV Bharat

ஈரோடு: சட்டசபை சண்டை சபையாக மாறுகிறது என்ற பிரேமலதா விஜயகாந்தின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்ட ஓரிட சேவை மையம் திறப்பு விழாவில் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு மையத்தை திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையனிடம், பிரேமலதா விஜயகாந்த் சட்டசபையா, சண்டைசபையா என்று குற்றஞ்சாட்டியது தொடர்பான கேள்வி கேட்டப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், “சட்டப்பேரவையில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெறுகிறது. பொதுவாக கருத்துப் பரிமாற்றம் என்பது வேறு. சட்டமன்ற நிகழ்வுகள் என்பது வேறு. ஒரு நிகழ்வை வைத்துக்கொண்டு குறை கூறக்கூடாது. மக்கள் நலன் காக்கும் திட்டங்கள் சட்டமன்றத்தில் நாள்தோறும் அறிவிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில் வேறு இடங்களில் விமான நிலையம் அமைப்பதற்காக இடங்கள் தேர்வு செய்வது பற்றி முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ளதை போல் சிறந்த முறையில் விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிப்பதற்கு தற்போது எந்த சாத்தியக்கூறுகளும் இல்லை. செப்டம்பர் மாதத்திற்கு பிறகு வறட்சி பாதிப்பு குறித்து குழு அமைத்து கணக்கெடுக்கப்பட்டு இதுகுறித்து தீர்மானிக்கப்படும்.

அந்த கணக்கெடுப்பின்போது, பயிரின் தன்மை மற்றும் நிலத்தின் தன்மை குறித்து கணக்கெடுப்பு செய்த பின்பு அறிவிக்கப்படும். கீழ் பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுவது நீட்டிக்க வாய்ப்பில்லை. ஏற்கனவே குந்தா, பைக்காரா போன்ற அணைகளில் இருந்து நீர் மின்சாரம் தயாரிக்க பயன்படும் தண்ணீர் தமிழ்நாடு அரசு மூலம் இரண்டு டிஎம்சி கேட்டு பெறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கும் திட்டம் ஓராண்டு நீட்டிப்பு - அரசாணை வெளியீடு

இதன் காரணமாகத்தான் கீழ்பவானி வாய்க்காலில் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கீழ்பவானி அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்யாததால்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பை பொறுத்தவரை கூடுதலாக உள்ள ஆசிரியர்களை பயன்படுத்திதான் தமிழ்நாடு அரசின் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

பண்டிகை காலங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் தனியார் பேருந்துகளில் கட்டண உயர்வு குறித்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சரிடம் முறையிட்டால் அதற்கான நடவடிக்கை கட்டாயமாக எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.