கூட்டணிக்காக விஜய் கதவை திறந்து வைத்துக்கொண்டு காத்துக்கிடக்கிறார் - அமைச்சர் ரகுபதி விமர்சனம்
அறிவாலயத்திற்கு டீ குடிக்க வருபவர்களை எல்லாம் அழைக்கும் நிலைமையில் திமுக இல்லை என்று விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.

Published : February 26, 2026 at 8:44 PM IST
புதுக்கோட்டை: தவெக கூட்டணிக்கு யாராவது வருவார்களா என்று கதவை திறந்து வைத்துக்கொண்டு விஜய் காத்திருப்பதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வாக்குறுதிகளை விமர்சித்து பல்வேறு கருத்துக்களை கூறினார்.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பங்களுக்கு உதவித்தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று இபிஎஸ் அறிவித்ததை குறித்து கேட்டதற்கு, ''எடப்பாடி பழனிசாமி தேர்தல் நேரத்தில் எதை வேண்டுமானாலும் அறிவிக்கலாம். தேர்தல் நேரத்தில் போகிற போக்கில் அறிவித்துவிட்டு செல்வதுதான் அவரது பழக்கம். ஆனால், அறிவித்ததை எல்லாம் நிறைவேற்றும் பழக்கம்தான் எங்களுக்கு (திமுக) உள்ளது. எடப்பாடி பழனிசாமி பத்தாயிரம் அல்ல, பதினைந்தாயிரம் கூட அறிவிப்பார்'' என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ரகுபதி, '' டெல்லியில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமியால் ஆட்சிக்கு வர முடியாது. அவர் ஒரு லட்சம் கூட அறிவிக்கலாம். ஆனால் ஏன் பத்தாயிரம் அறிவித்தார் என்பதுதான் தெரியவில்லை.
காங்கிரஸ் கூட்டணி விவகாரம் பொறுத்தவரை ராகுல் காந்தியும், மு.க.ஸ்டாலினும் பேசி எடுப்பதுதான் முடிவு. அதுதான் இறுதி. இந்தியாவிலேயே ஸ்டாலினை போல வேறு எந்த தலைவர்களும் கூட்டணி கட்சிகளை அரவணைத்து சென்றதாக வரலாறு இல்லை. அந்த புதிய வரலாறை கடந்த 10 ஆண்டுகளாக ஸ்டாலின் உருவாக்கி உள்ளார். விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை என்பதை போல ஸ்டாலினுக்கு நல்ல மனது. திராவிட மாடல் ஆட்சி மீண்டும் தொடரும்; மற்றவர்கள் பேசுவதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை.'' என்றார்.
தவெக குறித்து பேசிய அமைச்சர் ரகுபதி, '' புதிய கட்சிகள் வரவின் மூலம் எங்களது கட்சியின் பலம் அதிகரித்துள்ளது. அறிவாலயத்திற்கு டீ குடிக்க வருபவர்களை எல்லாம் அழைக்கும் நிலைமையில் திமுக இல்லை. ஆனால் பேசியவர்களின் (விஜய்) நிலைமை அப்படி இருக்கலாம். ஏனென்றால், அவர்கள் தான் தற்போது கூட்டணிக்கு யாரும் வருவார்களா? என்று கதவை திறந்து வைத்துக்கொண்டு காத்திருப்பதோடு யாரும் இதுவரை வராததால் ஈ ஓட்டி வருகிறார். யார் வேண்டுமானாலும் எங்கள் கூட்டணிக்கு வரலாம். இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை'' என்று கூறினார்.

