திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு - அமைச்சர் ரகுபதி பேட்டி
எந்தெந்த இடத்தில் என்னென்ன செய்ய வேண்டுமோ அதை தான் செய்ய வேண்டும் என்றும், சுடுகாட்டில் எரிக்க வேண்டிய பிணத்தை வேறிடத்தில் எரிக்க முடியுமா? என்றும் அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பினார்.

Published : January 6, 2026 at 4:37 PM IST
சென்னை: திருப்பரங்குன்றம் வழக்கில் நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பு சட்டத்திற்கு புறம்பானது என்றும், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் மலைக் கோயில் கல் தூணில், தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருப்பரங்குன்றம் வழக்கில் சட்டத்துக்கு புறம்பான தீர்ப்பு நீதியரசர்களால் வழங்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யவுள்ளோம்.
தீபத்தூண் என்று குறிப்பிடும் கல் தூணில் முன்பு தீபம் ஏற்றப்பட்டதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. காமராஜர், ராஜாஜி, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என பலர் ஆட்சி செய்துள்ளனர். ஆனால் அப்போதெல்லாம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. அப்படியிருக்கையில் தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பானது முழுக்க முழுக்க சட்டத்திற்கு முரணானது. எனவே இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய எங்களுக்கு முழு உரிமை உண்டு.
தமிழர்களின் கலாசாரம், பாரம்பரியம் காக்கப்பட வேண்டும். திருப்பரங்குன்றத்தில் இதுவரை இல்லாத நடைமுறையை புகுத்த முற்படுகின்றனர். சர்வே கல் என்பதற்கு ஆதாரம் சமர்ப்பித்தீர்களா? என்று கேட்கிறீர்கள். ஆனால் கடந்த 100 ஆண்டுகளில் கல் தூணில் தீபம் ஏற்றப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
| இதையும் படிங்க: திமுக ஆட்சியில் ரூ.4.5 லட்சம் கோடி ஊழல் - ஆளுநரை சந்தித்து மனு அளித்த எடப்பாடி பழனிசாமி |
சுடுகாட்டில் தான் உடலை எரிக்க வேண்டும் என்றால் சுடுகாட்டில் தான் எரிக்க வேண்டும். வேறு இடத்தில் எரிக்க மாட்டார்கள். அது போல எந்த பழக்க வழக்கத்தையும் மாற்றக் கூடாது. ஒரு இடத்தில் இதுதான் நடக்க வேண்டும் என்றால் அந்த இடத்தில் அதுதான் நடக்க வேண்டும். இந்த தீர்ப்பின் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கின்றனர். இல்லாத ஒரு வழக்கத்தை புகுத்தக்கூடாது. அமைதியை காக்கும் நோக்கத்தில் தான் அன்று காவல்துறை 144 தடை உத்தரவு பிறப்பித்தது.
காவல் துறை தடுக்காவிட்டால் அவர்கள் தீபம் ஏற்றி இதுவரை இல்லாத ஒரு நடைமுறையை கொண்டு வந்திருப்பர். ஒரு சிலர் மதக் கலவரத்தை உண்டாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். எனவே உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பை பெறுவோம்” என்றார்.
இபிஎஸ்ஸின் ஊழல் குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு, 10 ஆண்டுகள் ஆண்டு லஞ்ச லாவண்யத்தை தலைவிரித்து ஆட வைத்த எடப்பாடி பழனிசாமி எங்கள் மீது குற்றம் சுமத்துவது வேடிக்கையாக உள்ளது என்றும், ED, IT என எந்த சோதனையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்றும் கூறினார்.

