வீட்டுமனையை மிரட்டி வாங்கிய புகார்: அமைச்சர் பி.டி.ஆரின் முன்னாள் உதவியாளர் கைது
கடந்த ஓராண்டுக்கு முன்பு ஜெய் பாலாஜி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால், அவரை பணியில் இருந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விலக்கியதாகக் கூறப்படுகிறது.

Published : February 6, 2026 at 6:11 PM IST
மதுரை: ரூ.78 லட்சம் மதிப்பிலான வீட்டுமனையை மிரட்டி வாங்கிய புகாரில் தமிழக அமைச்சரின் முன்னாள் உதவியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள விஸ்வாஸ் பிரமோட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சீத்தாராமன் (70) கடந்த ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதியன்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரின் முன்னாள் உதவியாளர் ஜெய்பாலாஜி என்பவர் தன்னை ஏமாற்றி ரூ.78 லட்சம் மதிப்பிலான மனையை கிரையம் செய்து மோசடி செய்ததாகக் கூறி மதுரை மத்திய குற்றப்பரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதனடிப்படையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரின் முன்னாள் உதவியாளரான மதுரை பேச்சியம்மன்படித்துறை பகுதியைச் சேர்ந்த ஜெய்பாலாஜி மற்றும் அவரது மனைவியான கலாவதி ஆகிய இருவர் மீதும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனிடையே ஜெய்பாலாஜி அமைச்சரின் உதவியாளர் பணியிலிருந்து வெளியேறியுள்ளார். மேலும், சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மீது லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் ஜெய் பாலாஜி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
| இதையும் படிங்க: தை மாதம் முடிய இன்னும் 9 நாட்கள் உள்ளன; தமது அரசியல் நிலைப்பாடு குறித்து ஓபிஎஸ் மழுப்பல் பதில் |
இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர்-ல் (FIR) ஜெய்பாலாஜி மற்றும் அவரது மனைவி கலாவதி ஆகிய இருவரையும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நேற்று காலையில் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் ஜெய் பாலாஜி, மருதம் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் தொழிலிலும் செய்து வந்தார்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு ஜெய் பாலாஜி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால், அவரை பணியில் இருந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விலக்கியதாகக் கூறப்படுகிறது. போலீசார் தரப்பில், நிதி அமைச்சராக தியாகராஜன் பொறுப்பேற்றவுடன் ஜெய்பாலாஜியும் அவரது மனைவியும் அமைச்சரின் பெயரைக் கூறி, மாநகராட்சி உட்பட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பல்வேறு வேலைகளை அமைச்சருக்குத் தெரியாமலே செய்து பணம் சம்பாதித்துள்ளனர். இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த விவகாரம் மதுரை அரசியலில் பரபரப்பை கூட்டியுள்ளது.

