கோயில்களில் மதவெறியை வளர்க்காதீர்கள் - அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்
தமிழகத்தில், ‘தமிழ் வாழ்க தமிழகம் வாழ்க’ என்ற முழக்கத்தையே எழுப்ப வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Published : January 3, 2026 at 8:01 AM IST
திருநெல்வேலி: "அமைதி காக்கும் கோயிலில் மனிதநேயத்தை மட்டுமே வளர்க்க வேண்டும்; மதவெறியை அல்ல. பாரத் மாதாகி ஜே என்று கூறுவதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. அதனை கோயிலை தவிர்த்து மற்ற இடங்களில் கூறினால் கவலை இல்லை" என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நெல்லையப்பர் கோயிலில் வெள்ளி தேர் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு, திருத்தேர் வெள்ளோட்டத்தினை தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது, “தமிழகத்தில் இதுவரை 3,967 குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் மட்டுமே இருந்த ‘பெருந்திட்ட வரைவு’ திட்டத்தினை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட 17 கோவில்களில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம். சுமார் ரூ.400 கோடி மதிப்பீட்டில் திருச்செந்தூர் கோயிலில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் வெள்ளித்தேர் வெள்ளோட்டம்!
— P.K. Sekar Babu (@PKSekarbabu) January 2, 2026
மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு. மு. அப்பாவு அவர்களுடன் இணைந்து இன்று (02.01.2026), திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலில் புதியதாக உருவாக்கப்பட்ட வெள்ளித் தேரின் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தோம். (1/2) pic.twitter.com/cwphkTYAdx
நெல்லையப்பர் கோயிலில் பூட்டிக்கிடந்த ஆயிரங்கால் மண்டபம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கருஉருமாரி தெப்பம் சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சொல்வதை செய்யும் ஆட்சி என்பதற்கு நெல்லையப்பர் கோயில் வெள்ளி தேர் உலா சாட்சியாகும். இதுபோன்ற நலத்திட்டங்களை செய்து வரும் திராவிட மாடல் ஆட்சியை, ஆன்மீகத்திற்கு எதிரான ஆட்சி என சித்தரிக்க பார்க்கிறார்கள்.
| இதையும் படிங்க: திமுக - காங்கிரஸை பிரித்த விடுதலைப்புலிகள் விவகாரம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த வைகோ நடைபயணத்தை புறக்கணித்த காங்கிரஸ் |
தமிழகத்தில் ‘தமிழ் வாழ்க’ மட்டுமே
கன்னியாகுமரி சுசீந்திரம் தேரோட்டத்தில் விரும்பத்தகாத சம்பவம் நடைபெற்றது. கோயில் வளாகத்திற்குள் விரும்பத்தகாத முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த முழகத்தால் அங்கிருந்தவர்கள் முகம் சுழித்தனர். ‘பாரத் மாதா கி ஜே’ என்று கூறுவதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. அதனை கோயில் தவிர்த்து மற்ற இடங்களில் கூறினால் கவலை இல்லை. தமிழகத்தில், ‘தமிழ் வாழ்க தமிழகம் வாழ்க’ என்ற முழக்கத்தையே எழுப்ப வேண்டும். அராஜகத்திற்கும், அத்துமீறலுக்கும் அடங்குகிற ஆட்சி திமுக ஆட்சி அல்ல.
மதவெறியை வளர்க்கக்கூடாது
ஆன்மீகம் என்பது அறத்தை உணர்த்துவது, அராஜகத்தை உணர்த்துவதில்லை. அமைதி காக்கும் கோயிலில் மனிதநேயத்தை மட்டுமே வளர்க்க வேண்டும், மதவெறியை அல்ல. கலைகளை வளர்த்தால் உடன் இருப்போம், கலவரத்திற்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை. இதனால்தான் நான் அங்கு கோபப்பட்டேன். நானும் மனிதன்தானே, எனக்கும் உணர்வு இருக்கிறது, கோபம் வரத்தானே செய்யும்” என்றார்.

