ETV Bharat / state

ஓவர்நைட்டில் அதிரடி முடிவு, மூன்று மணி நேரத்திற்குள் ரூ. 6,700 கோடி உரிமைத்தொகை - அமைச்சர் பிடிஆர் பாராட்டு

’நீட்’ உலகிலேயே சட்டத்திற்கு புறம்பான தேர்வு என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 25, 2026 at 2:06 PM IST

2 Min Read
Choose ETV Bharat

வேலூர்: நள்ளிரவில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவின் அடிப்படையில், மூன்று மணி நேரத்திற்குள் 6,700 கோடி ரூபாயை ஒரு கோடியே 33 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகையாக வழங்கிய செயல் திறன் திமுக அரசுக்கு உள்ளது என்று தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதத்துடன் கூறினார்.

“தமிழ்நாடு தலைகுனியாது” என்ற தலைப்பில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், ”ஒரு யுகம் முடிந்து, அடுத்த யுகம் தொடங்கும் மாற்றக் காலகட்டத்தில் நாம் உள்ளோம். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உலகம் பல மாற்றங்களை சந்தித்துள்ளது. தற்போதும் பல நாடுகளில் போர் சூழ்நிலை நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நாட்டை முன்னேற்ற சிறந்த தலைமையும், தெளிவான செயல் திட்டமும் அவசியம். ஆனால் இந்தியாவில் உள்ள மத்திய அரசு வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தவில்லை.

ஒரு அரசியல்வாதிக்கு மனிதநேயம் முதன்மை. அதனுடன் தரவின் அடிப்படையிலான திட்டமிடல் மற்றும் நிதி மேலாண்மை அவசியம். நள்ளிரவில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், மூன்று மணி நேரத்திற்குள் 6,700 கோடி ரூபாயை ஒரு கோடியே 33 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகையாக வழங்கிய செயல் திறன் திமுக அரசுக்கு உள்ளது.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் (ETV Bharat Tamil Nadu)

தமிழ்நாட்டில் உயர்கல்வி பெறுவோரின் விகிதம் 47.3 சதவீதமாக உள்ளது, இது நாட்டிலேயே அதிகம். இந்திய மக்கள் தொகையில் 6 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள தமிழ்நாட்டில், பெண்கள் 43 சதவீதம் உற்பத்தித் துறையில் ஈடுபட்டிருப்பது பெருமைக்குரியது” என்றார்.

மத்திய அரசை விமர்சித்து பேசுகையில், “மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை குறைத்துள்ளது. கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி வழங்காமல் உள்ளது. மேலும், ’நீட்’ உலகிலேயே தனித்தன்மை கொண்ட சட்டத்திற்கு புறம்பான தேர்வு. இத்தேர்வு வடமாநில மாணவர்களுக்கு சாதகமாக உள்ளது.

2020ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தை, தமிழ்நாட்டுடன் ஒப்பிடும் போது ஒரு ரூபாய்க்கு நான்கு ரூபாய் அளவில் நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பல தடைகளை தாண்டியும், 11.11 சதவீத வளர்ச்சியை தமிழ்நாடு அரசு எட்டியுள்ளது, 13 ஆண்டுகளில் இல்லாத உயர்வாகும். மேலும் ஏற்றுமதிக்குத் தகுதியான முதல் மாநிலமாக தமிழ்நாடு, மத்திய அரசின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது” எனக் கூறினார்.

இதையும் படிங்க: சிறையில் இருந்து வந்த பிறகும் எனக்கு பல கெடுபிடிகள் விதிக்கப்பட்டன: உணர்ச்சி பொங்க பேசிய சசிகலா

தமிழ்நாட்டில் கடன் அதிகரித்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து பேசுகையில், “2014ஆம் ஆண்டு உற்பத்தியில் கடன் விகிதம் 16 சதவீதம் மட்டுமே இருந்தது. அதிமுக ஆட்சிக் காலத்தில் அது 26 சதவீதமாக உயர்ந்தது. நாங்கள் கடனை குறைக்க முடியும். ஆனால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் பின்னடைவு ஏற்படும்” என்றார். சமூகநீதி, சுயமரியாதை ஆகிய கொள்கைகளை பாதுகாக்கும் பணியில் திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எந்த அழுத்தத்திற்கும் தமிழ்நாடு தலைகுனியாது” என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுதிபட கூறினார்.