ETV Bharat / state

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத மோதல் ஏற்பட்டால் அமைச்சர் நிர்மல்குமார்தான் பொறுப்பு - மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு

மீனாட்சி கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெற வேண்டும் என மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வலியுறுத்தியுள்ளார்.

வாஞ்சிநாதன், மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு
வாஞ்சிநாதன், மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 1, 2026 at 6:35 PM IST

2 Min Read
Choose ETV Bharat

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மீண்டும் ஒரு மத மோதல் ஏற்பட்டால் அதற்கு அமைச்சர் நிர்மல் குமாரும் காவல் துறையும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவை தமிழ் மரபுப்படி நடத்த வேண்டும் என வலியுறுத்தி, மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வெறும் சமயச் சடங்கு தலம் மட்டுமல்ல, பல நூற்றாண்டு கால தமிழ்ச் சைவ பண்பாட்டின் அடையாளம். இத்திருக்கோயிலின் தெய்வங்கள் பண்டைய கல்வெட்டுகளில் 'திரு ஆலவாய் உடைய நாயனார்', 'திருக்காமக்கோட்டத்து ஆளுடைய நாச்சியார்' என தமிழ்ப் பெயர்களாலேயே அழைக்கப்பட்டுள்ளன.

ஏழாம் நூற்றாண்டிலேயே திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரப் பாடல்களில் பாடப்பட்ட தலம் இது. எனவே, தமிழில் இறைவனை போற்றுவது என்பது புதிய கோரிக்கை அல்ல; அது தொன்மையான வழிபாட்டு மரபு. கீழடி, கொடுமணல், பொருந்தல் போன்ற தொல்லியல் சான்றுகளை கொண்டுள்ளது.

இந்த நிலையில், வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவில் மொத்த யாகசாலைகளில் குறைந்தது 50 விழுக்காடு யாகசாலைகளை தமிழ் திருமுறை, தமிழ் சைவ மந்திரங்கள் மற்றும் தமிழ் ஆன்மிகப் பாடல்களுக்கு ஒதுக்க வேண்டும் எனவும், தமிழ் ஓதுவார்கள், திருமுறை அறிஞர்களுக்கு யாகசாலைக்குள் உரிய பங்கேற்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், குடமுழுக்கு பணிகள், குறிப்பிட்ட நபர்களான பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் போன்றோருக்கு வழங்கப்படுவதில் முழு வெளிப்படைத்தன்மை வேண்டும். ஒருவர் வெளிநாடு சென்றால் ஆகம தகுதியை இழப்பார் என்ற சாஸ்திர விதி இருக்கும்போது, அதே அளவுகோலை அனைவருக்கும் பொருத்த வேண்டும்.

குடமுழுக்கு விழாவிற்காக செலவிடப்படும் பல கோடி ரூபாய் நிதி, ஒப்பந்தங்கள், தேர்வு முறைகள் குறித்து டெண்டர் மற்றும் லைப்புள்ளி நடைமுறை பின்பற்றப்பட்டதா என்பதை வெளியிட வேண்டும்.

தமிழ் ஓதும் நிகழ்ச்சி நிரலை முன்கூட்டியே வெளியிட வேண்டும். மேலும், மதுரை கோயிலுக்கு தொடர்பில்லாதவரும், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறை சென்றவருமான காஞ்சி சங்கர மடத்தின் விஜயேந்திர சரஸ்வதிக்கு குடமுழுக்கு விழாவில் முன்னுரிமை அளிப்பதும், பாரம்பரியமிக்க தமிழ் சைவ மடமான மதுரை ஆதீனம் புறக்கணிக்கப்பட்டிருப்பதும் கண்டனத்துக்குரியது.

அதேபோல், மதுரை திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மீண்டும் மத மோதல் ஏற்பட்டால் அதற்கு காவல்துறையும், தற்போதுள்ள தவெக அரசின் அமைச்சரான நிர்மல் குமாரும் தான் முக்கிய பொறுப்பு ஏற்கவேண்டும். மலையின் மேலே உள்ள தர்காவில் முஸ்லிம்கள் வழிபாடு செய்ய தடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 311-வது பிறந்த நாள் - ஆளுநர், முதலமைச்சர் புகழாரம்

அவர்களை தடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டது யார்? அமைச்சர் நிர்மல் குமார் சங்பரிவார் அமைப்பின் ஆதரவோடு செயல்படுகிறார். தமிழ்நாடு காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ளதா? அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ளதா? என சந்தேகம் வரும் வகையில் காவல்துறையின் நடவடிக்கை சங்பரிவார் அமைப்புக்கு ஆதரவாக இருக்கிறது.

இதே நிலைமை நீடித்தால் மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் சார்பில் மக்களை ஒன்று திரட்டி, தவெக அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும்” என தெரிவித்தார்.