ETV Bharat / state

திமுக, அதிமுகவில் ஆளே இல்லாத நிலை ஏற்படும் - அமைச்சர் நிர்மல் குமார்

எங்களது கூட்டணியில் உள்ள திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாங்கள் அனைத்தையும் கலந்து பேசி இணக்கமாக செயல்பட்டு வருகிறோம் என அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.

அமைச்சர் நிர்மல் குமார்
அமைச்சர் நிர்மல் குமார் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 8, 2026 at 4:17 PM IST

2 Min Read
Choose ETV Bharat

கோயம்புத்தூர்: திமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் விரைவில் ஆளே இல்லாத நிலை ஏற்படும் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

மருதமலை பகுதியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியின் மூன்றாவது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. சட்டக் கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி மோகனா, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பாரதிதாசன், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், ”கோயம்புத்தூர் சட்டக் கல்லூரியில் இன்று மூன்றாவது பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது. இந்த விழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த உச்சநீதிமன்ற நீதியரசர் மோகனா கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்” என கூறினார்.

முதலமைச்சர் விஜய் கரூர் பயணம் குறித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், ”முதலமைச்சரின் கரூர் பயணத்திற்கான ஏற்பாடுகள் குறித்து, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். முதலமைச்சர் கரூர் செல்வதை கண்டு எதிர்க்கட்சிகள் ஏன் பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. எப்படியாவது அவரது கரூர் பயணத்தைத் தடுக்க வேண்டும் என்று எதிர்கட்சியினர் நினைக்கின்றனர்.

சிபிஐ விசாரணை குறித்து பேசும் இவர்கள், தங்களது ஆட்சிக் காலத்தில் சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தடை கோரியவர்கள் என்பதை மக்கள் மறக்கவில்லை. தற்போது எப்.ஐ.ஆர் கூட முழுமையாகப் படிக்காமல், உச்சநீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துள்ளனர்” என்றார்.

திமுக, அதிமுவை விமர்சித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று நினைத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இரு கட்சிகளும் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் தேய்ந்து வருகின்றன. இன்னும் ஒரு சில மாதங்களில், வெறும் 10 முதல் 15 பேரைத் தவிர, இந்த இரு கட்சிகளிலும் ஆட்களே இல்லாத நிலை ஏற்படும். அந்த அளவுக்குத் தமிழநாடு மக்கள் அவர்களைப் புறக்கணித்து, எங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்” என கூறினார்.

ஆதி திராவிடர் நலத்துறை சமூக நீதித்துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “ஆதி திராவிடர் நலத்துறை பெயர் மாற்றம் என்பது அனைத்துத் தரப்பு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். மக்களின் விருப்பத்தை ஏற்றே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது” என்றார்.

தவெக கூட்டணிக் கட்சிகள் குறித்து பேசுகையில், “எங்களது கூட்டணியில் உள்ள திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாங்கள் அனைத்தையும் கலந்து பேசி இணக்கமாகச் செயல்பட்டு வருகிறோம். முதலமைச்சர் விஜய் தலைமையில் விரைவில், அடுத்தகட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் கூட்டணிக்கான பெயர் மற்றும் குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டம் ஆகியவை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அக்கா ஸ்தானத்தில் தான் அமைச்சர் கீர்த்தனா மாணவியுடன் பேசினார் - அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

பட்டமளிப்பு விழாவில் பெற்றோர்களுக்கான வசதிகள் குறித்துக் கேட்கப்பட்ட போது, ”சுமார் 650 மாணவர்களுடன் அவர்களது பெற்றோர்களும், சேர்ந்து 2000-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். அனைவருக்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் கல்லூரி சார்பில் செய்யப்பட்டிருந்தன. அதன் காரணமாக, மதியம் 2 மணிக்கு முடிய வேண்டிய விழா, அரை மணி நேரத்திற்கு முன்பாகவே துரிதமாக நடத்தி முடிக்கப்பட்டது” என்று அமைச்சர் நிர்மல்குமார் பதிலளித்தார்.