தூய்மை பணியாளர்கள் காலை தொட்டு வணங்குகிறேன் - அமைச்சர் ஆவடி நாசர் நெகிழ்ச்சி
பொங்கல் பண்டிகை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ஆவடி நாசர், தூய்மை பணியாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்.

Published : January 7, 2026 at 12:41 PM IST
திருவள்ளூர்: கரோனா காலத்தில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய தூய்மை பணியாளர்களின் காலை தொட்டு வணங்குகிறேன் என அமைச்சர் ஆவடி நாசர் பேசினார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு, திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 500 தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி நகர் மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் ஆவடி நாசர் கலந்து கொண்டு, பொங்கல் பரிசு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், தூய்மை பணியாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தினர்.
அப்போது மேடையில் பேசிய அமைச்சர் ஆவடி நாசர், “கரோனா காலகட்டத்தில் எனது குடும்பத்தினர் கூட என்னிடம் சமூக இடைவெளியை கடைபிடித்தனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில், தன்னலம் பார்க்காமல் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் தூய்மை பணியாளர்கள் பணியாற்றினர். அவர்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்து, காலை தொட்டு வணங்குகிறேன்” என்றார்.
போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள்
முன்னதாக, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகளை செய்து வரும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாநகராட்சி பணிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சியில் உள்ள 5 மற்றும் 6-வது மண்டலங்களில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த மண்டலத்தை சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு விதங்களில் சென்னை ரிப்பன் மாளிகை, மெரினா கடற்கரை, தலைமைச் செயலகம், அண்ணா அறிவாலயம் உள்ளிட்ட பகுதிகளில் தங்களது கோரிக்கையை நிறைவேற்றக் கோரி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனிடையே, நேற்று சென்னையில் கூவம் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
| இதையும் படிங்க: ஒடிசா இளைஞர் தாக்குதல் விவகாரம்: வீடியோவை பரப்ப வேண்டாம் என திருவள்ளூர் எஸ்.பி வேண்டுகோள் |
இதனிடையே, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில வாரங்களாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், புதிய உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதேபோல், சம வேலைக்கு சம ஊதியம் வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தூய்மை பணியாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்

