ETV Bharat / state

புதிய பென்ஷன் திட்டம் பற்றி இபிஎஸ் விமர்சிப்பதில் அர்த்தமில்லை - அமைச்சர் முத்துசாமி பேட்டி

ஏற்கனவே அரசு நிலத்தை உபயோகித்து வருபவர்களுக்கு அந்த இடத்தில் இரண்டு சென்ட் நிலத்தை இலவசமாக வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் முத்துசாமி பேட்டி
அமைச்சர் முத்துசாமி பேட்டி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 9, 2026 at 9:51 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஈரோடு: அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பென்ஷன் திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சிப்பதில் அர்த்தமில்லை என வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு அடுத்த பெருந்துறை அருகே உள்ள நந்தா கலை அறிவியல் கல்லூரியில் ‘உங்க கனவு சொல்லுங்க’ என்ற முதலமைச்சரின் புதிய திட்டத்தை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த புதிய திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு நாட்கள் தன்னார்வலர்கள் வருவார்கள். அப்போது வழங்கப்படும் படிவத்தில் பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை எழுதித் தரலாம். அதற்காக தனியாக ஒரு அடையாள எண் கொடுக்கப்பட்டு, அட்டையும் வழங்கப்படும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 85 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. அவைகளில் 90% நிறைவேற்றப்பட்டு விட்டன. பெரும்பாலான மக்கள் பட்டா கோரி விண்ணப்பித்தனர். தமிழக முதலமைச்சர் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியை சுற்றியுள்ள 8 கிலோமீட்டர் பகுதிகளில் பட்டா வழங்க இருந்த தடையை நீக்கியுள்ளார். அதனால் பல இடங்களில் மக்களுக்கு பட்டா கிடைக்கிறது.

மேலும் ஏற்கனவே அரசு நிலத்தை உபயோகித்து வருபவர்களுக்கு அந்த இடத்தில் இரண்டு சென்ட் நிலத்தை இலவசமாக வழங்கவும், எஞ்சிய நிலத்தை விலை கொடுத்து வாங்கிக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: சென்சார் போர்டு ஒன்றிய அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது - 'ஜனநாயகன்' விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதிய பென்ஷன் திட்டம் பற்றி இபிஎஸ்ஸின் கருத்து குறித்து எழுப்பிய கேள்விக்கு, “அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பென்ஷன் திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் விமர்சிப்பதில் அர்த்தமில்லை. ஏனென்றால் அரசு உயர் சங்கங்கள் அதை வரவேற்று பாராட்டியுள்ளன. 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுக, இந்த விஷயத்தில் என்ன செய்தது?” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, “சமீபத்தில் ஈரோடு வந்த மத்திய வேளாண் துறை அமைச்சர் விவசாயிகளுக்கு அரசு ஒன்றும் செய்யவில்லை என கூறுவது தவறு. அந்தியூர் மற்றும் நம்பியூர் வட்டாரங்களில் பலர் அரசு நிலத்தை உபயோகித்து வந்தனர். அதற்காக கண்டிஷன் பட்டா வழங்கப்பட்டிருந்தது. தற்போது நிபந்தனைகளை நீக்கி அவர்களுக்கு முழுமையாக பட்டா வழங்கப்படுகிறது. இதுபோன்று விவசாயிகளுக்கு பல நன்மைகளை இந்த அரசு செய்து வருகிறது” என்றார்.

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்குவதில் உள்ள சர்ச்சை பற்றிய கேள்விக்கு, "திரைப்படத்தை பற்றி தனக்கு எதுவும் தெரியாது" என்று பதிலளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு எம்பி கே.இ பிரகாஷ், எம்எல்ஏ விசி சந்திரகுமார், அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம், ஆட்சியர் எஸ். கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.