தலைமைச் செயலகத்திற்கு அருகே வேண்டுமானால் விஜய் கொடி ஏற்றுவார் - அமைச்சர் முத்துசாமி கிண்டல்
திமுக மீது கட்சி, அரசியல்ரீதியாக என்ன விமர்சனம் வைத்தாலும், நாட்டின் பிரதமர் என்ற முறையில் அவர் மீது மரியாதை வைத்து இருக்கிறோம் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

Published : March 2, 2026 at 3:36 PM IST
ஈரோடு: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமைச் செயலகத்திற்கு அருகே வேண்டுமானால் கொடியேற்றுவதற்கு இடத்தை பார்த்துக் கொள்ளலாம் என அமைச்சர் முத்துசாமி பதிலளித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோட்டில் அரசு பள்ளிகளில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர முத்துசாமி, ”மகளிருக்கு 5 ஆயிரம் ரூபாய் அரசியலுக்காக தமிழ்நாடு அரசு கொடுக்கவில்லை, முன்கூட்டியே பணம் கொடுக்கப்பட்டதால் பெண்கள் மத்தியில் முதலமைச்சருக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்து இருக்கிறேன்” என கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி முன் வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் முத்துசாமி பேசுகையில், “திமுக மீது கட்சி, அரசியல்ரீதியாக என்ன விமர்சனம் வைத்தாலும், நாட்டின் பிரதமர் என்ற முறையில் அவர் மீது மரியாதை வைத்து இருக்கிறோம். ஆனால் பிரதமர் அடிப்படை கருத்துக்களை ஆராய்ந்து சொல்லி இருக்க வேண்டும், அரசியல் ரீதியாக கருத்துக்களை சொல்லக்கூடாது.
தனிப்பட்ட முறையில், அரசியலுக்கு அப்பாற்பட்டு ஆய்வு செய்தால் பிரதமர் கூறியதில் தவறு உள்ளது என்று புரியும். அவருக்கு யார் அந்த தகவல்கள் கொடுத்தார்களோ, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸ், திமுக தரப்பில் குழு அமைக்கப்பட்டுள்ளன. அதில் வரக் கூடிய முடிவுகள் அடிப்படையில் தான் நாங்கள் சொல்ல முடியும், அதற்கு அப்பாற்பட்டு கருத்துக்கள் சொல்ல முடியாது. ஒவ்வொரு கட்சியை சார்ந்தவர்களும் பேசுவார்கள், அது பேச்சுவார்த்தை மட்டுமே. திருமணத்திற்கு முன்பு நடத்தக் கூடிய பேச்சுவார்த்தை போல தான் கூட்டணி கட்சியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது” என்றார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இந்தாண்டு தலைமை செயலகத்தில் தேசிய கொடி ஏற்றுவார் என அக்கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியுள்ளார். அதுகுறித்து பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, ”இன்றும் செங்கோட்டையன் எனக்கு நண்பர் தான். தலைமை செயலகத்தில் விஜய் கொடியேற்ற மாட்டார், விஜய் கொடியேற்றுவதற்கு தலைமைச் செயலகத்தின் அருகில் வேண்டுமானால் இடம் பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

