ETV Bharat / state

மகளிர் உரிமைத்தொகை கொடுக்கும்போது தேர்தல் வந்ததா? அமைச்சர் முத்துசாமி கேள்வி

பாமகவை முன்னிறுத்தவே, ஆளும் தி.மு.க அரசு மீது அன்புமணி ராமதாஸ் அபாண்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

பொங்கல் பரிசுத்தொகை மற்றும் பரிசுத்தொகுப்பை வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி பொதுமக்களுக்கு வழங்கினார்
பொங்கல் பரிசுத்தொகை மற்றும் பரிசுத்தொகுப்பை வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி பொதுமக்களுக்கு வழங்கினார் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 8, 2026 at 6:25 PM IST

1 Min Read
Choose ETV Bharat

ஈரோடு: தேர்தலுக்காக ரூ.3,000 பொங்கல் பரிசுத் தொகை கொடுக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், மகளிர் உரிமைத் தொகை கொடுக்கும்போது தேர்தல் வந்ததா என்று அமைச்சர் முத்துசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் ரேஷன் கடையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசுத்தொகை மற்றும் பரிசுத்தொகுப்பை வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி பொதுமக்களுக்கு வழங்கி தொங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள் தரப்பில் இருந்து பொங்கல் பரிசுத்தொகை வழங்குவது தேர்தல் அரசியல் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருவது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்து.

அதற்கு பதிலளித்த முத்துசாமி, “எதை செய்தாலும் இப்படி சொன்னால், இதனை நிறுத்திவிடலாமா? அரசின் நிதி நிலைமைக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் திட்டம் கொண்டுவரப்படுகிறது. இந்தாண்டு பொங்கல்பரிசு வழங்கப்படுகிறது. மகளிர் உதவித்தொகை திட்டம் வரும்போது தேர்தல் வரவில்லை” என பதிலளித்தார்.

தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமி எதாவது கொடுக்கவேண்டும் என்பதற்காக ஆளுநரிடம் ஊழல் பட்டியலை கொடுத்துள்ளார் என்று ஆளும் அரசின் மீது எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

ஐந்தாண்டு திமுக ஆட்சிக்கு 13 மதிப்பெண் வழங்க அன்புமணி வாத்தியாரா? என்று கேள்வி எழுப்பிய முத்துசாமி, தோல்வி பயத்தால் தி.மு.க 3 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அன்புமணி தெரிவித்திருப்பது, தங்களை முன்னிருத்துவதற்காக சொல்லப்படுவது என்றார்.

மேலும், டாஸ்மாக் தொடர்பாக பேசிய அவர், “500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. கூடுதல் கடைகளை மூடுவதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. அனைத்து டாஸ்மாக் பணியாளர்களை குறை சொல்வது வருத்தமாக உள்ளது. ஒரு சிலர் செய்யும் தவறை, ஒட்டுமொத்த ஊழியர்கள் மீது திணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ”ஜனநாயகன் வெளியாகும் அன்று தான் பொங்கல்” - விஜய்க்கு திரைத்துறையில் பெருகும் ஆதரவு

காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்தில், டாஸ்மாக் ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்க, வேறுவிதமான நடவடிக்கை எடுக்கப்படும். எடப்பாடி பழனிச்சாமி டாஸ்மாக் துறையில் 40 ஆயிரம் கோடி ஊழல் என ஆளுநரிடம் புகார் கொடுத்திருப்பதில் எந்த முகாந்திரமும் இல்லை.

ஆய்வு செய்து ஒன்றும் இல்லை என கைவிடப்பட்ட விவகாரம். ஊழலை நிரூபித்தால் பதில் சொல்லலாம். எந்த தவறும் நடைபெறாத நிலையில், குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல அவசியம் இல்லை,” என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.